சீனாவுக்கு விழுந்த பேரடி.. உலக நாடுகளுக்கு 90 நாட்களுக்கு வரியை நிறுத்திய டிரம்ப்.. இந்தியாவுக்கு எப்படி?

Donald Trump On Tariffs: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் இறக்குமதி வரியை நிறுத்தியுள்ளார் டிரம்ப்.

சீனாவுக்கு விழுந்த பேரடி..  உலக நாடுகளுக்கு 90 நாட்களுக்கு வரியை நிறுத்திய டிரம்ப்.. இந்தியாவுக்கு எப்படி?

டிரம்ப்

Updated On: 

10 Apr 2025 08:45 AM

அமெரிக்கா, ஏப்ரல் 10: அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதல் இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் இறக்குமதி வரியை நிறுத்தியுள்ளார் டிரம்ப். அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

90 நாட்களுக்கு வரியை நிறுத்திய டிரம்ப்

குறிப்பாக வரி விதிப்பில் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் கூட  உலக நாடுகளுக்கு  10 சதவீதம்  இறக்குமதி வரியை விதித்தார்.  இதில், இந்தியாவுக்கு 26 சதவீதம் இறக்குமரி வரியை வரியை விதித்தார். அதே நேரத்தில் சீனாவுக்கு  34 சதவீதம் இறக்குமதி வரியை விதித்தார்.

இதன் மூலம் சீன பொருட்கள் மீதான வரி 54 சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும் 34 சதவீத கூடுதல் வரியை விதிப்பதாக அறிவித்தது.  இதனால் கடுப்பான டிரம்ப், கூடுதலாக 50 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டார்.

இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்கள் மீதான வரி 104 சதவீதமாக உயர்ந்தது.  இந்த நிலையில், சீனா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 124 சதவீதமாக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்தார்.  இந்த வரி விதிப்பு அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் நிலை என்ன?


அதே நேரத்தில் மற்ற 75 நாடுகளுக்கான இறக்குமதி வரியை 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் நிறுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரி தொடர்பாக 75க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்ததாகவும், வரிகளுக்கு எந்த வகையிலும் பதிலடி கொடுக்கவில்லை என்று கூறிய டிரம்ப், 90 நாட்கள் அந்த நாடுகளுக்கான வரியை நிறுத்தப்போவதாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சீனாவுக்கு 125 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை தனது எக்ஸ் தளத்தில், “பழிவாங்காதீர்கள், உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய மரியாதையின்மையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவிற்கு விதிக்கப்படும் வரியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 125 சதவீதமாக உயர்த்துகிறேன்.

நம்பிக்கையுடன், எதிர்காலத்தில், அமெரிக்காவையும் பிற நாடுகளையும் சீர்குலைக்கும் நாட்கள் இனி நிலையானவை அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்பதை சீனா உணரும்” என்று டிரம்ப் கூறினார். இதனுடன், சீனாவைப் போல யாராவது பதிலடி கொடுத்தால், விளைவு சீனாவைப் போலவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.