சவுதி அரேபியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி.. வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..

PM Modi Visit To Saudi Arabia: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதி சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி.. வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..

கோப்பு புகைப்படம்

Published: 

19 Apr 2025 12:10 PM

பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) அடுத்த வாரம் சவுதி அரேபியாவுக்கு (Saudi Arabia) அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். இது அவரது மூன்றாவது பதவி காலத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணமாகும். இதற்கு முன்பு அவர் 201 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் ஜெட்டாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த பயணத்தில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள், எரிசக்தி ஒத்துழைப்பு, இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா வழித்தடத்தை புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி, சவுதி அரேபியா அரசாங்கத்துடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியின் பயணத்திட்டம்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சவுதி அரேபியாவிற்கு அரசு முறையை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பிரதமரின் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தனது அணுசக்தி திட்டத்திற்காக ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த பயணம் அமைய உள்ளது.

முன்னதாக ஏப்ரல் 2016 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் ரியாத் பயணம் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பல்வேறு விஷயங்களில் மேம்பட்ட மற்றும் விரிவான ஒத்துழைப்புக்கு வழிவகுத்தது. பிப்ரவரி 2019 இல் இளவரசர் முகம்மது பின் சல்மானின் இந்தியா வருகைக்கு இது ஒரு உந்துக்கோளாக அமைந்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் ரியாத்துக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியா சவுதி உறவைகளை வழிநடத்த உயர்மட்ட கவுன்சில்களை நிறுவும் மூலபய கூட்டான்மை கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து இளவரசர் முகமது பின் சல்மான் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவும், இந்தியா சவுதி அரேபியா மூலம் கவுன்சிலின் முதல் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் மோடியுடன் இணைந்து தலைமை தாங்கவும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

எரிசக்தி பாதுகாப்பு:

இது ஒரு பக்கம் இருக்க எரிசக்தி பாதுகாப்பிற்கு சவுதி அரேபியாவுடனான உறவுகள் மிகவும் முக்கியமானது. 2023 மற்றும் 24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக சவுதி அரேபியா அமைந்தது. மேலும் இந்தியா சவுதி அரேபியாவில் இருந்து 33.35 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 14.3% ஆகும். இப்படி இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் இருக்கக்கூடிய உறவை பலப்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் அமையும் என உயர்மட்ட நிலையில் இருக்கும் அதிகாரிகள் கருத்தை தெரிவிக்கின்றனர்