பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!
Pakistan's Minister Admits Terror Funding | ஜம்மு & காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான், ஏப்ரல் 25 : பாகிஸ்தான் (Pakistan), பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளருக்கு பதில் அளித்த அவர், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காகவே இத்தகைய செயலை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், பயங்கரவாதம் குறித்து குவாஜா ஆசிப் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜம்மு & காஷ்மீர் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை – பாகிஸ்தான் அமைச்சர்கள்
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டை சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அட்டாரி வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தம் உள்ளிட்ட அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று (ஏப்ரல் 24, 2025) செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அமைச்சர்கள், இந்தியா தங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், காஷ்மீர் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆதாரம் இருந்தால் இதனை பொது வெளியில் காட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும், தாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
நேரலையில் உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்
Pakistani defense minister Khawaja Asif responds to Yalda Hakim’s question on Pakistan funding terrorists.
“Well, we have been doing this dirty work for United States and west for 3 decades….including Great Britain” pic.twitter.com/hjjAya7iQp
— Viper 🇮🇳 (@viper202020) April 25, 2025
மூன்று தசாப்தங்களாக நாங்கள் இதனை செய்து வருகிறோம் – குவாஜா ஆசிப்
இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் குவாஜா ஆசிப் இன்று (ஏப்ரல் 25, 2025) தனியார் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு மற்றும் பயிற்சி அளித்த நீண்ட வரலாறு குறித்து செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், தாங்கள் சுமார் மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக இந்த மோசமான செயலை செய்து வருவதாக ஒப்புக்கொண்டார்.