“நாங்க தயாரா இருக்கிறோம்” இந்தியா எடுத்த அதிரடி ஆக்ஷன்.. பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!
Pakistan PM Shehbaz Sharif On Pahalgam Attack : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்தைக் கண்டித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளதாகவும் கூறினார்.

பாகிஸ்தான், ஏப்ரல் 26: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் (Pahalgam Terror Attack) குறித்து நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Pakistan PM Shehbaz Sharif) தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நடுநிலை விசாரணைக்கு தயாராக இருப்பதாக ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியா எடுத்த அதிரடி ஆக்ஷன்
இந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியா உட்பட உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பாவின் நிழல் பிரிவாகும். ஆகவே இந்த தீவிரவாதிகளை அழிகக இந்திய முடிவு செய்து அதற்கான நடவடிக்கை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி உள்ளது.
இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சிந்து நதிநீர் ஒப்பந்ததை ரத்து செய்தது, வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் விசா ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேர உத்தரவு, தூதர பாதுகாப்பு வாபஸ் போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும், எல்லையில் இந்திய ராணுவ துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் ஷெபாஷ் ஷெரீப் அதுகுறித்து பேசியுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறுகையில், “பஹல்காமில் நடந்தது ஒரு பழி சுமத்தும் விளையாட்டு. எங்கள் மீது அவதூறு பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்தைக் கண்டித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. எங்களது ராணுவம் போருக்குத் தயாராக உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் கொண்டது. அமைதியே நமது முன்னுரிமை. ஆனால் அதை யாரும் நமது பலவீனமாகக் கருதக்கூடாது.
பாதுகாப்பில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம். தண்ணீரை நிறுத்த ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறினார். சிந்து நதிகள் பாகிஸ்தானுக்கு உயிர்நாடியாக உள்ளன. இந்த நதி நீர் மூலம் 80 சதவீத விவசாய நிலங்கள் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த சிந்துநீர் ஒப்பந்தத்தை தான் தற்போது இந்தியா ரத்து செய்த நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.