”எங்களுக்கு சம்பந்தமே இல்ல” காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்… பாகிஸ்தான் விளக்கம்!
Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மௌனம் கலைத்துள்ளது. அதாவது, பஹல்கான் பயங்கரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு இந்திய அரசே காரணம் என்றும் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத (Pahalgam Terror Attack) தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பஹல்காம் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்று தெரிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் பஹல்கான் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 28 பேர் உயிரிழந்தனர்.
”எங்களுக்கு சம்பந்தமே இல்ல”
மேலும், பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பஹல்கானில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு பஹல்கான் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், “பாகிஸ்தானுக்கு பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய அரசு நாகாலாந்து, மணிப்பூர், காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்களை எதிர்கொள்கிறது. அரசாங்கம் பலரைச் சுரண்டி வருவதால் இது உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டது.
பாகிஸ்தான் அரசு விளக்கம்
நாங்கள் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு இந்திய தான் காரணம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், ”உள்ளூர் படைகள் இந்திய அரசை குறிவைத்தால், பாகிஸ்தான் மீது பழிப்போட எளிதாகிவிடும்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் உயிர் இழப்பு குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு உள்ளது. பஹல்காமில் தாக்குதல் நடந்த நிலையில், தற்போது தான் பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது கூட, பயங்காரவாதிகளின் வரைபடம் வெளியாகி இருந்தது. அதாவது, உயிர் பிழைத்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மூன்று பயங்கரவாதிகளின் வரைபடம் தயாரிக்கப்பட்டு, வெளியாகி உள்ளது.
மேலும், தாக்குதலின்போது இருந்த பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் அவர் கையில் ஏகே 47 ரக துப்பாக்கியை வைத்துள்ளதை காட்டுகிறது. இப்படி பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.