இந்தியர்கள் வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவு.. 48 மணி நேரம் கெடு!
Pakistan Government Ordered Indians to Leave | பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதில் நடவடிக்கை எடுக்கும் விதமாக பாகிஸ்தான் இதனை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஏப்ரல் 24 : பாகிஸ்தான் (Pakistan) வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானில் உள்ள அனைத்து இந்தியர்களும் வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீரில் (Jammu and Kashmir) சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு எதிர் நடவடிக்கையில் ஈடுபடும் விதமாக இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் கொல்லப்பட்ட 27 சுற்றுலா பயணிகள்
இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமான ஜம்மு & காஷ்மீரில் உள்ள பஹல்காம் (Pahalgham) பகுதியில் தீவிரவாதிகள் ஏப்ரல் 22, 2025 அன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட 27 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பஹல்காமில் நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃரெண்ட் (The Resistance Front) அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இதன் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் மீது பல அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு இந்தியா மீது பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
இந்தியா மீது பதில் நடவடிக்கை எடுக்க தொடங்கிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது இந்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டு அரசு இந்தியாவை பாதிக்க கூடிய சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
- இந்தியா உடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
- பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
- பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.
- இந்தியாவுக்கு சார்க் நாடுகள் விசா வழங்குவதையும் நிறுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு இந்தியா மீது பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.