Pahalgham Terror Attack : தண்ணீர் முதல் வர்த்தகம் வரை.. பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தியாவின் திடீர் மூவ்!
India's Major Retaliatory Steps : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 2025, ஏப்ரல் 22ல் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 28 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு சில பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்றிருந்தாலும், இந்தியா நேரடியாக பாகிஸ்தானை இதற்கு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் ( Pahalgham Terror Attack) நடந்த 24 மணி நேரத்திற்குள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒன்றன் பின் ஒன்றாக பெரிய முடிவுகளை எடுத்தது. இது, இந்தியா இனி கண்டனம் செய்வது மட்டுமல்லாமல், நடவடிக்கையும் எடுக்கும் என்ற தெளிவான செய்தியை முழு உலகிற்கும் கொடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த அவசரக் கூட்டத்தில், பாகிஸ்தானின் முதுகை உடைப்பது போல் தோன்றும் அளவுக்கு இந்தியா ஒரு சர்ஜிக்கல் ராஜதந்திர தாக்குதலை நடத்தியுள்ளது. அதாவது துப்பாக்கிச் சண்டை எதுவுமில்லாத பாகிஸ்தான் (Pakistan) அரசு மீதான தாக்குதல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா எடுத்த முக்கிய முடிவுகள் பாகிஸ்தானில் எந்த அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.
முதல் முடிவு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகும். இதே ஒப்பந்தத்தின் கீழ்தான் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா தனது நீர் பங்கை பாகிஸ்தானுக்கு வழங்கி வந்தது. ஆனால் இப்போது இந்த தண்ணீரை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிந்து நதி நீரை நிறுத்துவது பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
பாகிஸ்தானின் 80% விவசாயம் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் நீரைச் சார்ந்துள்ளது. இந்த ஆறுகளில் கட்டப்பட்டுள்ள பல அணைகள் மற்றும் நீர் மின் திட்டங்களிலிருந்தும் பாகிஸ்தான் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில், தண்ணீரை நிறுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டிற்கும் கடுமையான பற்றாக்குறையை உருவாக்கும். இது பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் பொது வாழ்க்கை இரண்டையும் பாதிக்கும்.
அட்டாரி எல்லை மூடப்பட்டால் என்ன நடக்கும்?
இரண்டாவது பெரிய முடிவு அட்டாரி எல்லைச் சாவடியை மூடுவது என்று எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முறையான வர்த்தகம் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தாலும், சில பொருட்களின் பரிவர்த்தனை சிறு வணிகர்களின் மட்டத்திலேயே தொடர்ந்தது. இப்போது அட்டாரி போஸ்ட் மூடப்பட்டதால், இந்த சிறிய பரிவர்த்தனைகள் கூட முற்றிலுமாக நிறுத்தப்படும், இது பாகிஸ்தானிய வர்த்தகர்களுக்கு நேரடி இழப்பை ஏற்படுத்தும்.
சார்க் விசா தடை
மூன்றாவது பெரிய முடிவின் கீழ், பாகிஸ்தான் குடிமக்களுக்கான சார்க் விசா திட்டத்தை இந்தியா முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. மேலும், குடும்ப காரணங்களுக்காக இங்கு வந்த பாகிஸ்தான் குடிமக்களும் இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மக்கள் அளவிலும் முடிவுக்கு கொண்டு வரும் செயல். மேலும், அனைத்து பாகிஸ்தான் குடிமக்களும் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற இறுதி எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
ஊர் திரும்ப காலக்கெடு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆலோசகர்கள் ஏழு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது. இதனுடன், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக மற்றும் அனைத்து இந்தியஆலோசகர்களையும் இந்தியா திரும்ப அழைத்துள்ளது. இதன் பொருள் இப்போது இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லை என்பதாகும்
என்ன நடக்கும்?
இந்த முடிவுகளின் மூலம், பாகிஸ்தானுடனான அனைத்து வகையான உறவுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கி இந்தியா இப்போது நகர்ந்து வருவதை தெளிவுபடுத்தியுள்ளது. விசாக்கள் இல்லை, வர்த்தகம் இல்லை, ஆலோசனை தொடர்பான உரையாடல் இல்லை. இதன் மூலம் பாகிஸ்தானை ஒவ்வொரு முனையிலும் தனிமைப்படுத்தும் உத்தியை இந்தியா செயல்படுத்தத் தொடங்கியுள்ளது என்றே பார்க்கலாம்.