ஈரான் துறைமுக வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.. 1500 பேருக்கு சிகிச்சை!
Iran Port Explosion Death Toll Increase | ஈரானின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றுதான் பாந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜேய். இந்த துறைமுகத்தில் ஏப்ரல் 26, 2025 அன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக அங்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆக உள்ளது.

ஈரான் துறைமுக விபத்து
ஈரான், ஏப்ரல் 28 : ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக அங்கு இரண்டு நாட்களை கடந்தும் தீ இடைவிடாமல் எரிந்து கொண்டு இருக்கும் நிலையில், தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ளது. அதுமட்டுமன்றி, இந்த தீ விபத்தில் சிக்கிய காயமடைந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரிக்க அந்த நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து – 40-ஐ கடந்த பலி எண்ணிக்கை
ஈரானின் பாந்தர் அப்பாஸ் என்ற நகரில் உள்ள துறைமுகத்தில் மிக மோசமான வெடி விபத்து ஒன்று நடைபெற்றது. ஈரானின் முக்கிய துறைமுகமாக கருதப்படும் இந்த ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் ஏப்ரல் 26, 2025 அன்று இந்த வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் தற்போது வரை அதன் தாக்கம் குறையாமல் உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட துறைமுகத்தில் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. துறைமுகத்தில் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த கெமிக்கல்கள் வெடித்தன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கெமிக்கல் கண்டெய்னர்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தீ விபத்து நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது
அரை நிமிடத்தில் வெடித்து சிதறிய துறைமுகம்
Security cameras capture the moment of the ignition at Shahid Rajaei Port in Iran from yesterday. pic.twitter.com/jyv7N4Ampt
— Open Source Intel (@Osint613) April 27, 2025
தொடந்து உயரும் பலி எண்ணிக்கை
துறைமுகம் வெடித்து சிதறியதில் அதன் அருகில் இருந்த வீடுகள் மற்றும் கட்டடங்களை அது மிக கடுமையாக பாதித்துள்ளது. இந்த விபத்தில் முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்த நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உள்ளதாகவும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 1,500 ஆஜ உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகவும், எண்ணெய் ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமாகவும் விளங்கிய துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர தீ விபத்தின் காரணமாக ஈரானின் பொருளாதாரம் பாதிகப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த வெடி விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை உயருவதற்கான அபாயம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.