மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட வனியா அகர்வால்.. என்ன காரணம்?
Vaniya Agarwal: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 வது ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது இந்திய வம்சாவளியை சேர்ந்த வனியா அகர்வால், மைக்ரோசாஃப்ட் இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆயுதங்களை வழங்குகிறது என குற்றம் சாட்டி குரல் எழுப்பினார். இதனை தொடர்ந்து அவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட வனியா அகர்வால் மற்றும் இப்தில்லா அபுசத்
கடந்த சில நாட்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 வது ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது அந்நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வனியா அகர்வால் என்ற பெண், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எதிராகவும், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த வனியா அகர்வால் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
She chose humanity over her career.
Vaniya Agarwal 🔥#PalestineWillBeFree 🇵🇸✊
Shame on you @Microsoft pic.twitter.com/coKKvQQh9M— Mansoor Ashraf (@Mohdmansoorashr) April 10, 2025
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கடந்த வாரம் (ஏப்ரல் 6, 2025) 50 வது ஆண்டு விழா தினம் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதல்லா, பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் என பல முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் குறுக்கிட்டு பேசிய வனியா அகர்வால், அந்நிறுவனத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். வனியா அகர்வால் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், இவர் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 50 வது ஆண்டு விழா தினத்தில் முக்கிய அதிகாரிகள் முன்பு, அந்நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அதாவது காசாவில் நடந்து வரும் போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு செயற்கை நுண்ணறிவு கருவிகளை வழங்குவதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், “காசாவில் 50,000 பாலஸ்தீனியர்கள் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? அவர்களின் இரத்தத்தைக் கொண்டாடுவதற்கு நீங்கள் அனைவரும் வெட்கப்படவேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
வனியா அகர்வாலுடன் இணைந்து மற்றொரு மைக்ரோசாஃப்ட் ஊழியரான இப்தில்லா அபுசத்தும் அந்நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். அப்போது பேசிய இப்தில்லா அபுசத், “ நீங்கள் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள், ஆனால் மைக்ரோசாஃப்ட் இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆயுதங்களை வழங்குகிறது. இதன் காரணமாக 50,000 பேர் இறந்துள்ளனர்” என தெரிவித்தார்.
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுத்த வனியா அகர்வால் மற்றும் இப்தில்லா அபுசத்தையும் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.