கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களுக்கு புதிய ஆபத்து? – டிரம்ப்பின் சமூக ஊடக கொள்கை!
மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் அமெரிக்க விசாவுக்கு (Visa) விண்ணப்பித்திருந்தால் அவர்களும் தங்களது சமூக வலைதள கணக்கை பகிர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த முறையானது சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிப்பவர்களும், சட்டப்பூர்வமாக வசிக்க விண்ணப்பிப்பவர்களுக்கும் புகலிடம் கோருபவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் (Donald Trump) கொண்டு வந்த புதிய விதிமுறையின் படி அமெரிக்காவில் கிரீன் கார்டு (Green Card) வைத்திருப்பவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கை அரசிடம் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்டிடிவியின் செய்தியின் அடிப்படையில் மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் அமெரிக்க விசாவுக்கு (Visa) விண்ணப்பித்திருந்தால் அவர்களும் தங்களது சமூக வலைதள கணக்கை பகிர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த முறையானது சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிப்பவர்களும், சட்டப்பூர்வமாக வசிக்க விண்ணப்பிப்பவர்களுக்கும் புகலிடம் கோருபவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் இந்தியர்களைப் பாதிக்கும் என கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் உரிய அனுமதியின்றி அமெரிக்காவில் வசித்தவர்களை கை விலங்கிட்டு இந்தியாவுக்கு திருப்பிய அனுப்பப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த மாற்றம்?
இந்த நிலையில் டிரம்ப் அரசின் இந்த முடிவு, அமெரிக்காவில் குடியேற விரும்பும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிரான மனப்பான்மையை தடுக்க அந்நாட்டு அரசு முயலலாம் என கூறப்படுகிறது. மேலும் இது, சட்டபூர்வமாக அமெரிக்காவில் வசித்து அமெரிக்க அரசியலில் கருத்துக்களை பதிவிடும் பல இந்தியர்களை பாதிக்கக்கூடும். குறிப்பாக அரசின் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டு, அரசியல் தொடர்பான கருத்துகளை இணையத்தில் பகிரும் நபர்கள் எதிர்மறை விளைவுகளுக்கும் ஆளாக வாய்ப்பிருக்கிறது.
கடந்த மார்ச் 5, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், அமெரிக்க அரசு பொதுமக்களின் கருத்துக்களை பெற திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (United States Citizenship and Immigration Services) வெளியிட்ட அறிக்கையில், ” விசா விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், தேசிய மற்றும் பொது பாதுகாப்பு பரிசோதனை மற்றும் தொடர் ஆய்வுகளுக்காக, அவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகளை பெற்று, அதன் மூலம் சமூக ஊடக விவரங்களை சேகரிப்பது அவசியமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சமூக ஊடக கணக்குகளை பரிசோதிப்பது விண்ணப்பதாரர்களின் அடையாள சரிபார்ப்பு, பரிசோதனை மற்றும் தேசிய பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பு ?
இந்தக் கண்காணிப்பு அமெரிக்காவில், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் குடியேறும் மற்ற நாட்டினரை கண்காணிக்க டிரம்ப் நிர்வாகம் தனது குடியேற்றக் கொள்கைகளை மேலும் கடுமைப்படுத்தி வருகிறது. இதில், கிரீன் கார்டு மற்றும் விசா வைத்திருப்பவர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக அதிகாரத்தில் வந்ததிலிருந்து அனுமதியின்றி குடியேறியவர்களை நாடு கடத்துவதற்கான டிரம்பின் தீவிர நடவடிக்கைகள் அமெரிக்காவின் அரசியல் சீர்திருத்தங்களை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்க அதிரபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, சட்டவிரோத குடியேற்றத்தால் அமெரிக்கா ஆக்கிரமிக்கப்படுகின்றது எனக் கூறி குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடிவெடுத்தார். மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 1.1 கோடி பேரினால்் குற்றச் செயல்கள், வன்முறை மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கான முக்கிய காரணிகள் என அவர் தெரிவித்தார். எனினும் இதற்கான எந்த ஆதாரங்களும் அரசு தரவுகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் இவ்வாறு குடியேறியவர்கள் அமெரிக்க அரசு வளங்களை அதிகம் பயன்படுத்தி, அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைத்தார்.