ரூ.13,000 கோடி மோசடி.. பலநாள் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மெஹுல் சோக்சி கைது!

Diamond Merchant Mehul Choksi Arrested | பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெஹுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மெஹுல் சோக்சி கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.13,000 கோடி மோசடி.. பலநாள் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மெஹுல் சோக்சி கைது!

மெஹுல் சோக்சி

Published: 

14 Apr 2025 10:44 AM

சென்னை, ஏப்ரல் 14 : இந்தியாவின் மிகப்பெரிய வைர வியாபாரியும் (Diamond Merchant) பஞ்சாப் நேஷனல் வங்கியில் (Punjab National Bank) ரூ.13,000 கோடி மோசடி செய்தவருமான மெஹுல் சோக்சி (Mehul Choksi) பெல்ஜியத்தில் (Belgium) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மெஹுல் சோக்சியை கைது செய்து எப்படியாவது நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசு பல காலமாக திட்டம் தீட்டி வந்த நிலையில், திடீர் திருப்பமாக அவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மெஹுல் சோக்சி யார், அவர் செய்த மோசடி என்ன, அவர் இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பலகோடி ஊழல் செய்து தலைமறைவாக இருந்த மெஹுல் சோக்சி

65 வயதாகும் மெஹுல் சோக்சி அவரது உறவினர் நீரவ் மோடியுடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி மோசடி செய்த வழக்கில் சிபிஐ (CBI – Central Bureau of Investigation) மற்றும் அமலாக்கத்துறையால் (ED – Enforcement Directorate) தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக உள்ளார். சோக்சி 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி இந்தியாவில் இருந்து தப்பித்துச் சென்றார். பிறகு அவர் அமெரிக்காவுக்கு சென்றதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் ஆன்டிகுவா பகுதிக்கு சென்றார்.

அவர் இந்தியாவில் இருந்து தப்பித்துச் செல்வதற்கு முன்பாகவே திட்டமிட்டு ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற்றிருந்தார். சோக்சி 2021 ஆம் ஆண்டு கியூபாவுக்கு செல்ல முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது சட்டக்குழு அவர் ஆன்டிகுவாவில் இருந்து கடத்தப்பட்டதாக கூறியது.  இதன் காரணமாக அவர் மீண்டு ஆன்டிகுவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், சோக்சி புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பெல்ஜியம சென்றுள்ள நிலையில், அவர் அங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவாரா?

மெஹுல் சோக்சி இத்தனை நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை எப்படியாவது இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு வந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என கூறப்படுகிறது. காரணம், மெஹுல் சோக்சி மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக கருதப்படுகிறார். அதுமட்டுமன்றி, அவருக்கு ஐரோப்பாவில் சிறந்த சட்ட வல்லுநர்கள் உள்ளனர். மேலும் அவரது உடல்நிலையில் சில சிக்கல்கள் உள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவது கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.

மெஹுல் சோக்சி இந்தியாவில் 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.