Canada Election 2025: கனடா தேர்தலில் பெரும்பான்மை.. மார்க் கார்னிக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
Mark Carney's Liberals Win Majority: கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் மோடி, மார்க் கார்னிக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியா-கனடா உறவை வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகக் கூறியுள்ளார். கார்னி, இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்திருந்தார்.

டெல்லி, ஏப்ரல் 29: கனடா பொதுத் தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) லிபரல் கட்சி (Liberal Party) பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, லிபரல் கட்சி 165 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப போக்குகள் வந்த பிறகு, கனடா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கார்னியின் வெற்றியைக் கோரியுள்ளது. இந்தநிலையில், கனடா பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது வாழ்த்துகளை எக்ஸ் மூலம் தெரிவித்துள்ளார். அதில், இந்தியா – கனடா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடி வாழ்த்து:
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ இந்தியாவும், கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுவியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான மக்களுக்கு இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் மக்களுக்கு அதிக வாய்ப்புகளை திறந்து, எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு:
Congratulations @MarkJCarney on your election as the Prime Minister of Canada and to the Liberal Party on their victory. India and Canada are bound by shared democratic values, a steadfast commitment to the rule of law, and vibrant people-to-people ties. I look forward to working…
— Narendra Modi (@narendramodi) April 29, 2025
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதில் மார்க் கார்னி:
பிரபல பொருளாதார நிபுணரும், கனடா வங்கியின் முன்னாள் ஆளுநருமான மார்க் கார்னி, முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூரோவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக லிபரல் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கனடா தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியாவுடனான பதட்டமான உறவுகளை மேம்படுத்துவதாக மார்க் கார்னி உறுதியளித்தார். அப்போது அவர், “கனடா போன்ற ஒரு நாடு, இந்தியா போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்த விரும்புகிறது. மேலும், இந்தியாவுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன.” என்று தெரிவித்திருந்தார். மேலும், இந்தியா – கனடா உறவுகள் பல மட்டங்களில் மிகவும் முக்கியமானவை என்றும், இன்றைய உலகளாவிய அமைப்பில், இரு நாடுகளும் இணைந்து திறந்த, பகிரப்பட்ட பொருளாதார மற்றும் சித்தாந்த உறவுகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
மார்க் கார்னி:
மார்க் ஜோசப் கார்னி மார்ச் 16, 1965 அன்று கனடாவின் ஃபோர்ட் ஸ்மித்தில் பிறந்தார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பெற்றார். மார்க் கார்னி பிரபல நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸில் முதலீட்டு வங்கியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதன் பிறகு அவர் அரசுப் பணிப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், 2008 ஆம் ஆண்டில் கனடா வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.