மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை – ராஜஸ்தானில் நடந்த பரபரப்பு சம்பவம்

Medical Mishap in Rajasthan: ராஜஸ்தானில் விபத்தில் காயமடைந்த மகனுக்கு பதிலாக அவரது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை இழக்க செய்யும்.

மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை - ராஜஸ்தானில் நடந்த பரபரப்பு சம்பவம்

மாதிரி புகைப்படம்

Published: 

18 Apr 2025 00:03 AM

ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் உள்ள கோட்டோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் (Jaipur) அருகே மனீஷ் ஒரு இளைஞர் விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இந்த நிலையில் அவர் தனது தந்தைக்கு போன் செய்து விபத்து குறித்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு கடந்த 2025, ஏப்ரல் 12 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. மனீஷின் தந்தை பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவர். அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே மனீஷின் தந்தை காத்திருந்திருக்கிறார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து மனீஷ் வெளியே வந்த போது அவரது தந்தையின் உடலில் 5 – 6 தையல்கள் போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். விசாரித்தபோது அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து கோட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்கீதா சக்சேனா இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். “நான் கண்காணிப்பாளரிடம் ஒரு குழுவை அமைத்து 2-3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னேன். அவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். அவர்கள் விசாரித்து என்ன நடந்தது என்று எங்களிடம் தெரிவிப்பார்கள் என்றார்.

மருத்துவமனையின் அலட்சியத்தால் ஏற்பட்ட துயரம்

இந்த சம்பவம் மருத்துவமனையின் மிகவும் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது. மருத்துவம் என்பது உயிரை காக்கும் ஒரு உன்னதமான தொழில். எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. அங்கு இதுபோன்று நடைபெறும் சம்பவங்கள் மருத்துவமனைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைக்கும். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு உயிர் அவ்வளவு அலட்சியமாக போய்விட்டதோ என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை ஒரு முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் சிகிச்சை முறைகளை முறை படுத்தப்பட வேண்டும். சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன் நோயாளிகள் முறையாக அடையாள உறுதிப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனையின் மேலான்மை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சாத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துவருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ​2018 ஆம் ஆண்டு டிசம்பரில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையின் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்த 23 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர், சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு இரத்தம் செலுத்தப்பட்டபோது, தவறுதலாக எச்ஐவி தொற்றுள்ள இரத்தம் வழங்கப்பட்டது .​ சிவகாசி அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இருந்து பெற்ற ‘O’ பாசிட்டிவ் இரத்தம், அந்தப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.பின்னர், 19 வயது இளைஞர் ஒருவர், தன்னிடம் எச்ஐவி தொற்று இருப்பதை அறிந்து, தானாகவே மருத்துவமனை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு எச்ஐவி பரிசோதனை நடத்தப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது .​