கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் – ஷாக்கான ஜோடி! – வைரலாகும் வீடியோ
ஆட்டோ ஓட்டுநர்கள் கொரியன் மொழியில் பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர்கள் பதிலுக்கு வணக்கம் சொன்னார்கள். வணக்கம் மட்டும் கொரிய மொழியில் சொல்லிவிட்டு இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுவார்கள் என எதிர்பார்த்த ஜோடிக்கு மேலும் ஆச்சரியங்கள் காத்திருந்தது. அவர்கள் சரளமாக கொரியன் பேசி அசத்தினர்

ஆட்டோ
ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்திற்கு தென் கொரியாவில் இருந்து கணவன் மனைவி இருவர் சுற்றுலா வந்திருக்கின்றனர். அப்போது ராஜஸ்தானின் தங்க நகர் என அழைக்கப்படும் ஜெய்சல்மாருக்கு (Jaisalmer) பேருந்தில் வந்து இறங்கினர். அவர்களை சூழ்ந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கொரியன் மொழியில் வணக்கம் சொன்னார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் கொரியன் மொழியில் பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர்கள் பதிலுக்கு வணக்கம் சொன்னார்கள். வணக்கம் மட்டும் கொரிய மொழியில் சொல்லிவிட்டு இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுவார்கள் என எதிர்பார்த்த ஜோடிக்கு மேலும் ஆச்சரியங்கள் காத்திருந்தது. அவர்களிடம் தொடர்ந்து கொரிய மொழியில் பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள், கொரியாவில் இருந்து வருபவர்களை பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது என்கின்றனர். அதற்கு அவர்கள் ஓ! அப்படியா? என ஆச்சரியம் தெரிவக்கின்றனர்.
மேலும் உங்களை நான் அழைத்து செல்லட்டுமா? என ஒரு ஆட்டோ ஓட்டுநர் கேட்க, அவர்கள் இல்லை, நாங்கள் நடந்து செல்கிறோம் என பதிலளிக்கின்றனர். பின்னர் அவர்களின் மொழி அறிவை வியந்து பாராட்டி சென்றனர். மேலும் தாங்கள் கொரிய மக்களுக்கு இந்த ஊரை பரிந்துரைப்போம் என்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ராஜஸ்தான் மக்களின் மொழியறிவு
இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர், நான் ராஜஸ்தானுக்கு சென்ற போது, உள்ளூர் வாசிகள் பலர் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை அறிந்திருப்பதை அறிந்து வியந்தேன். அவர்களில் ஒருவர் எனக்கு பிரெஞ்சு மொழியில் சில வார்த்தைகளை கற்றுக்கொடுத்தார் என்றார். மற்றொருவர் தனது கமெண்ட்டில் ராஜஸ்தான் மக்களால் எல்லா மொழிகளையும் பேச முடியும் என்றார். மேலும் இன்னொருவர், அவர்கள் டூலிங்கோவை பயன்படுத்துவார்கள் போல. அவர்கள் ஓய்வு நேரத்தில் கொரியன் வெப் சீரிஸ்களை பார்க்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அண்டை மாநில மொழிகளையே நம்மால் பேச முடியாத போது, அவர்கள் உலகத்தின் மற்றொரு மூலையில் இருக்கும் மொழிகளை சரளமாக பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நகரங்களில் அவர்களின் மொழிகளை தெரிந்திருப்பது வியாபாரிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும் என்பது இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் சினிமாவில் கொரிய படங்களின் தாக்கம்
நீயா நானா நிகழ்ச்சியில் கூட ஒருவர் வெகு சரளமாக கொரியன் மொழியில் பேசினார். காரணம் இந்திய மக்கள் கொரியன் மொழி படங்களையும் வெப் சீரிஸ்களையும் அதிகம் பாரக்க தொடங்கியிருக்கின்றனர். அவர்களின் பெரும்பாலான கதைகள் நம்மால் கனெக்ட் செய்ய கூடிய அளவிற்கு இருக்கிறது. தமிழ் சினிமாவில் கொரியன் மொழி படங்களின் பாதிப்பில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்த காதலும் கடந்து போகும் படம் கூட மை டியர் டிஸ்பேரடோ (My dear desperado) என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தமிழுக்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருப்பார் நலன்.