Video : கூடலூர் அருகே போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த சிறுத்தை – பயத்தில் காவலர்கள் செய்த செயல்

Leopard Enters Police Station : மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது, கடுமையான வெப்ப நிலை ஆகிய காரணங்களால் வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதுபோன்ற சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சமீபத்தில் நடந்திருக்கிறது. காவல் நிலையத்தில் ஒரு சிறுத்தை ஒன்று நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Video : கூடலூர் அருகே போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த சிறுத்தை - பயத்தில் காவலர்கள் செய்த செயல்

காவல் நிலையத்துக்குள் புகுந்த சிறுத்தை

Updated On: 

29 Apr 2025 22:45 PM

நீலகிரி, ஏப்ரல் 29: தமிழ்நாட்டின் நீலகிரி (Nilgiris) மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குள் சிறுத்தை (Leopard) புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 28, 2025 அன்று, இரவு 8.30 மணியளவில், கூடலூர் – ஊட்டி (Ooty) தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் காவல் நிலையத்திற்குள் ஒரு சிறுத்தை நுழைந்தது. மெதுவாக உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்த அறையைச் சுற்றி நடந்தது. அந்த அறையில் சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டது. அதே நேரத்தில், மற்றொரு அறையில் பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, அறையில் ஒரு சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பயத்தினால் சத்தம் எழுப்பாமல் அமைதியாக அங்கேயே நின்றார். அறையைச் சுற்றிப் பார்த்தும் சாப்பிட எதுவும் கிடைக்காததால், சிறுத்தை மீண்டும் படிக்கட்டுகளில் இறங்கி, வந்த வழியே சென்றது. அதனுடன், சிறுத்தை இருக்கிறதா இல்லையா என்று பார்க்க கதவு வழியாக காவல் அதிகாரி எட்டிப்பார்த்தார். சிறுத்தை வெளியேறியதை அறிந்தது நிம்மதி பெருமூச்சு விட்ட அவர், உடனடியாக காவல் நிலைய கதவுகளை மூடினார்.

பின்னர் அவர் உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர். இந்த நிலையில், சிறுத்தை காவல் நிலையத்திற்குள் நுழைந்த காட்சிகள் வெளியே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

காவல் நிலையத்திற்குள் நுழைந்த சிறுத்தை

 

சிறுத்தை காவல் நிலையத்திற்குள் நுழைந்ததால் உள்ளூர் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். சிறுத்தையை விரைவில் பிடித்து அதனிடம் இருந்து தங்களைப் பாதுகாக்குமாறு உள்ளூர்வாசிகள் வனத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி மாவட்டங்களில் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் காப்பி தோட்ட குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்திருக்கிறது. இதனைப் பார்த்த அந்த வீட்டின் பெரியவர் வீட்டின் உள்ளே அவரை விட்டு கதவை வெளியிலிருந்து பூட்டியிருக்கிறார். உடனடியாக வனத்துறயினருக்கும் தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் கிட்டத்தட்ட 8 மணி நேரம் போராடி சிறுத்தையை பிடித்தனர். அந்த நேரத்தில் இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது.