இண்டர்வியூவில் 2K கிட்டை நிராகரித்த மேனேஜர் – அப்படி என்ன பண்ணார்?
நேர்காணல் என்பது ஒருவரது திறமைகளை ஆராய்வது மட்டுமல்ல. அவரது பிரச்னைகளையும் எடுத்துக்காட்டுவதும் கூட. அவர்கள் எப்படி வேலை செய்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டுவதற்காகவும் நேர்காணல் முக்கியம். ஊதியம் என்பது தன்னம்பிக்கையுடன் கூடிய திறமைக்காக வழங்கப்படுகிறது.

சென்னையில்(Chennai) உள்ள ஒரு நிறுவனத்தின் மார்கெட்டிங் ஆபிசராக பணியாற்றும் மணிமாறன் ராமலிங்கம் என்பவர் தன்னிடம் நேர்காணலுக்கு(Interview) வந்த ஒருவரை நிராகரித்தற்கான காரணத்தை தனது லிங்க்டின்(LinkedIn) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நேர்காணலுக்கு ஒருவர் வந்தார். அவர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார். என்னிடம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் எதிர்பார்ப்பதாக சொன்னார். ஆனால் அதற்கு முன்பாக ஹெச்ஆரிடம் ரூ.8 லட்சம் சம்பளம் எதிர்பார்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த வேறுபாடு குறித்து அவரிடம் கேட்டபோது, எனக்கு அதற்கான திறமை இருக்கிறது என மிகுந்த தன்னம்பிக்கையுடன் சொன்னார். அவரது திறமைகளை சோதித்த போது அவர் ரூ.5 லட்சத்துக்கு கூட தகுதி இல்லாதவர் என தெரியவந்தது.
நான் அவரிடம் உங்கள் நம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் எதன் அடிப்படையில் உங்களுக்கு நான் அவ்வளவு தொகையை ஊதியமாக வழங்க முடியும் என்று கேட்டேன். உடனே குறுக்கிட்ட அவர், எனக்கு 100 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கமாட்டீர்கள் ஆனால் 200 சதவிகிதம் வேலையை எதிர்பார்ப்பீர்களா? என கேட்டார். அதற்கு நான், அப்படி உங்களிடம் சொல்லவில்லையே? உங்கள் திறன் குறித்து சொல்லுங்கள் என்றேன்.
நேர்காணல் வந்தவரை நிராகரிக்க காரணம் என்ன ?
அவர் இதுவரை செய்த வேலைகள் குறித்து என்னிடம் பேசி, அவர் செய்த பணிகளையும் என்னிடம் காட்டினார். அவை ஒன்றும் சிறப்பானதாக இல்லை. அவர் தற்போது வாங்கிக்கொண்டிருக்கும் ஊதியத்திற்கு கூட தகுதி இல்லாதது போல் தோன்றியது. அவரது பிரச்னை குறித்து நான் விளக்கினேன். அவர் 2.5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஆனால் அவரது பணியில் உள்ள பிரச்னைகளை நான் சுட்டிக்காட்டினேன். அவரது மனது காயப்பட்டது எனக்கு நன்றாக தெரிந்தது. அது மகிழ்ச்சியே. இந்த காலத்து இளைஞர்களிடம் உள்ள பிரச்னைகள் குறித்து அவரிடம் பேசினேன். அவர் வெளியே போகும்போது நான் சொன்னதை முற்றிலும் புரிந்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன்.
நேர்காணல் என்பது ஒருவரது திறமைகளை ஆராய்வது மட்டுமல்ல. அவரது பிரச்னைகளையும் எடுத்துக்காட்டுவதும் கூட. அவர்கள் எப்படி வேலை செய்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டுவதற்காகவும் நேர்காணல் முக்கியம். ஊதியம் என்பது தன்னம்பிக்கையுடன் கூடிய திறமைக்காக வழங்கப்படுகிறது. நிஜ உலகில் தன்னம்பிக்கை மட்டும் போதாது. நான் ஒன்றை செய்வேன் என்பதை விட, நான் என்ன செய்திருக்கிறேன் என்பதே மிகவும் முக்கியமானது. அவரை நேர்காணல் செய்யவிருக்கும் இன்னொரு நபரை நான் காப்பாற்றியிருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
மணிமாறனின் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
இந்த நிலையில் அவரது பதிவுக்கு பலரும் எதிர்மறை கமெண்ட்டுகளை பதிவு செய்திருக்கின்றனர். அதில் ஒருவர், புதிதாக நேர்காணல்களுக்கு செல்பவர்களுக்கு அனுபவம், திறன், நிறுவனங்களின் அடிப்படையில் ஊதிய முறைகள் எப்படி மாறுகிறது என்பதை முன்பே கற்பிப்பது அவசியம். பெரும்பாலானோர் இதனை நேரடி அனுபவம் மூலம் கடினமான முறையில் உணர்கிறார்கள். மேலும், நிறுவனங்கள் தங்கள் சிறந்த பணியாளர்களுக்கு கூட நியாயமான சம்பளத்தை வழங்க தவறுகின்றன. இதனால் அதிக சம்பளம் கேட்பது மற்றும் அடிக்கடி வேலையை மாற்றுவது ஆகியவை நியாயமான விஷயமாக மாறிவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் இதற்கு முந்தைய தலைமுறையினரை பல நிறுவனங்கள் குறைவான ஊதியம் கொடுத்து உழைப்பு சுரண்டலை செய்திருக்கின்றனர். ஆனால் தற்போது இளைஞர்கள் தெளிவாக இருக்கின்றனர். ஒரு பணியிடத்துக்கு இவ்வளவு ஊதியம் என முன்பே திட்டமிட்டு இருப்பார்கள். அதற்கு ஏற்ப தான் பணியாளர்களை நேர்காணலுக்கு நிறுவனங்கள் அழைக்கின்றன. அப்படி இருக்கும்போது நேர்காணலின் போது மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து மாறன் பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.