இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் – காதலனை தேடி இந்தியா வந்த அமெரிக்க பெண் – வைரலாகும் வீடியோ
American Woman Loves Andhra Man: அமெரிக்காவைச் சேர்ந்த போட்டோகிராபர் ஜாக்லின் ஃபோரெரோ இந்தியாவில் உள்ள ஆந்திராவிற்கு தனது காதலனைத் தேடி வந்திருக்கிறார். இவருக்கும் சந்தன் சிங் ராஜ்புட் என்ற ஆந்திராவைச் சேர்ந்த அந்த இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் மெசேஜில் இருவரும் பேசிக்கொள்ளத் தொடங்க, மெல்ல அது காதலாக மாறியிருக்கிறது.

ஜாக்லின் ஃபோரெரோ - சந்தன் சிங் ராஜ்புட்
காதல் சாதி, மத, இன, மொழி ஆகியவற்றைப் பார்ப்பதில்லை என ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. அமெரிக்காவைச் (America) சேர்ந்த போட்டோகிராபர் ஜாக்லின் ஃபோரெரோ இந்தியாவில் உள்ள ஆந்திராவிற்கு தனது காதலனைத் தேடி வந்திருக்கிறார். இவருக்கும் சந்தன் சிங் ராஜ்புட் என்ற ஆந்திராவைச் சேர்ந்த அந்த இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் மெசேஜில் இருவரும் பேசிக்கொள்ளத் தொடங்க, மெல்ல அது காதலாக மாறியிருக்கிறது. இருவரும் 1 வருடத்துக்கும் மேலாக வீடியோ காலில் பேசி காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஜாக்லின் இந்தியாவிற்கு (India) தனது காதலனை தேடி வந்திருக்கிறார். சந்தனை சந்தித்ததை வீடியோவாக பதிவிட்டுள்ள ஜாக்லின், 14 மாத காதலுக்கு பிறகு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விடியோவில், ‘உலகில் இன்னொரு பக்கம் இருக்கும் இளைஞனுடன் நேரில் சந்தித்துக்கொள்ளாமல் காதலித்து திருமணம் செய்யவிருக்கிறேன். தற்போது அவரது அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பித்து காத்திருக்கிறோம். அமெரிக்காவில் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நெட்டிஷன்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காதலுக்கு மொழி, இனம் தடையில்லை என நிரூபித்த ஜோடி
காதல் எங்கு, எப்போது யார் மீது வேண்டுமானாலும் வரலாம் என்பதை ஜாக்லின் நிரூபித்திருக்கிறார். 90களில் வந்த நிறைய படங்களில் பார்க்காமல் காதல், ஒரு தலைகாதல் என பல விசித்திரமான காதல்களை பாத்திருக்கிறோம். ஆனால் பெரும்பாலானவை இந்த காலகட்டத்தில் நம்ப முடியாதவையாகவே இருக்கும். காரணம் காதலை வெகு இயல்பாக கையாள தொடங்கியிருக்கிறோம். இப்பொழுது காதலுக்கு நீண்ட காத்திருப்பு என்பதெல்லாம் இல்லை என்ற பிம்பம் தான் பலருக்கும் இருக்கும். ஆனால் 14 மாத காத்திருப்புக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு பெண் அந்த எண்ணத்தை உடைத்திருக்கிறார்.
ஜாக்குலின் பதிவிற்கு பலரும் தங்களது காதல் கதைகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பெண், ‘என்னுடைய கணவர் கேரளாவைச் சேர்ந்தவர். வேலை காரணமாக டெல்லி வந்தார். நாங்கள் சந்தித்துக்கொண்டோம். இப்பொழுது எங்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். பார்ப்பதற்கு இது அழகாக தெரியலாம். ஆனால் அது கடினம். கலாச்சார ரீதியான வேறுபாட்டினால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதனை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இதே போல நியூயார்க்கை சேர்ந்த ஒனிஜா ஆண்ட்ரூ என்பவரும் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமதுவும் ஆன்லைனில் பழகிவந்திருக்கின்றனர். இது பின்னாளில் காதலாக மாறியிருக்கிறது. இதனையடுத்து ஒனிஜா ஆண்ட்ரூ, நிடல் அகமதுவை தேடி பாகிஸ்தான் வந்திருக்கிறார்.இந்த நிலையில் நிடல் அகமதுவின் பெற்றோர் இருவரது காதலையும் ஏற்கவில்லை. காரணம் ஒனிஜாவிற்கு 30வயது ஆகும் நிலையில் நிடல் அகமதுவிற்கு 17 வயதுதான் ஆகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.