Viral Video: அதே அடி.. ரோகித் சர்மா போல் ஆட்டமாடிய 6 வயது சிறுமி!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், 6 வயது பாகிஸ்தான் சிறுமி சோனியா கான் அசத்தலான கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது புல் ஷாட்கள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை நினைவூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்

கிரிக்கெட் (Cricket) என்றால் யாருக்கு தான் பிடிக்காது. உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இந்த கிரிக்கெட் பல்வேறு வடிவங்களில் விளையாடப்படுகிறது. டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும். அதேபோல் கிரிக்கெட் தொடங்கிய காலம் தொட்டு தற்போது வரை அதில் பங்கேற்று விளையாடி வரும் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் (Cricket Players) ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். தற்காலத்தில் பெண்களும் கிரிக்கெட் அசாத்தியமான சாதனைகளைப் படைத்து வருகின்றனர். நாம் ஒவ்வொருவரும் கையில் பேட் அல்லது பந்தை ஏந்தினால் நமக்குள் அந்த கிரிக்கெட் வீரரின் சக்தி விடும். நம்முடைய ரோல் மாடல் (Role Model) எப்படியெல்லாம் ஆடுவார்கள், பந்து வீசுவார்கள் என்பதை ஸ்டைலாக காட்டுவோம்.
இன்றைக்கும் வயது வித்தியாசமில்லாமல் பலரும் கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்டுள்ளோம். முன்பு மாதிரி சர்வதேச கிரிக்கெட் ஈர்ப்பு குறைந்து விட்ட போதிலும் நண்பர்களுடன் விளையாடும் கிரிக்கெட் போட்டியின் மகிழ்ச்சி எந்த வயதிலும் எள்ளளவும் குறையாது. சமீபகாலமாக முன்னணி வீரர்களின் பேட்டிங்கை போல சிறு வயதைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் விளையாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அப்படியான வீடியோக்களைப் பார்த்து கிரிக்கெட் வீரர்களே அசந்து போவார்கள். அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதன்படி சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி சோனியா கான் என்பவர் குறிப்பிடத்தக்க திறமையுடன் புல் ஷாட் அடிக்கச் செய்து அசத்தியுள்ளார். அச்சிறுமியின் ஆட்டம், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது.
வைரலாகும் வீடியோ
6 yrs old ~ Talented Sonia Khan from Pakistan 🇵🇰 (Plays Pull Shot like Rohit Sharma) 👏🏻 pic.twitter.com/Eu7WSOZh19
— Richard Kettleborough (@RichKettle07) March 19, 2025
அந்த வீடியோவில் அசால்ட்டாக முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் இணையவாசிகளை அதிகளவில் கவர்ந்துள்ளது. குறிப்பாக கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பலரும் அச்சிறுமியின் திறமையை பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். பல பயனர்கள் சோனியா கான் பேட்டிங் நுட்பத்தை இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஒப்பிட்டுள்ளனர்.
ஒரு பயனர் சிறுமியின் பேட்டிங்கை “அருமை!” என்று புகழ்ந்துள்ளார். மற்றொரு பயனர் “சில உண்மையான திறமைகள் உள்ளன. ஆனால் அவை வெளிப்படுத்த வழியில்லாமல் உள்ளது” என தெரிவித்துள்ளார். இன்னொருவர் “இளம் சோனியா கான் தனது இடத்திற்குள் அழகாக விளையாடுகிறார், ஒரு நிபுணரைப் போல மேம்படுத்துகிறார். கட்கள் அல்லது ஸ்வீப்கள் இல்லை, ஆனால் ‘V’ இல் அற்புதமான ஸ்ட்ரோக்குகள். ஒரு உண்மையான கல்லி கிரிக்கெட் நேர்த்தி அவரிடம் உள்ளது. ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் கிடைக்கப்பெறும் புல் ஷாட்டைப் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது!” என தெரிவித்துள்ளார். மற்றொருவர் நகைச்சுவையாக “சோனியா கான் பாகிஸ்தானின் தேசிய அணியை விட சிறப்பாக விளையாடுகிறார்” என்று கூட தெரிவித்துள்ளார்.
திறமைகள் என்பது அனைவரிடத்திலும் உள்ளது. அதனை சரியான திசையில் கொண்டு சென்றால் நாம் நாளை தேசத்துக்காக கூட எந்த விதமான துறையிலும் பங்கேற்கும் நிலை வரலாம். எனவே திறமைகளை வெளிக்கொணருங்கள் என சிலர் அட்வைஸ் செய்துள்ளனர்.