3 நாட்கள் ஸ்மார்ட்போனை தவிர்த்தால் மூளையில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்! ஆய்வில் வெளியான தகவல்கள்
Smart phone: மனிதர்கள் மூன்று நாட்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைத் தவிர்த்தால், அது மூளையின் டோபமின் மற்றும் செரடோனின் அமைப்புகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இவை, நிகோட்டின் அல்லது ஆல்கஹால் போன்ற போதைப்பொருள் அடிமைகளாக இருப்பவர்களுக்கு காணப்படும் மாற்றங்களை ஒத்ததாக இருக்கிறதாம்.

ஸ்மார்ட்போன்களின் (Smartphones) பயன்பாடு நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்று அது ஒரு வெறும் கருவியாக அல்லாமல் நாம் பயன்படுத்தும் அடிப்படை தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. சிலர் சாப்பிட மறந்தாலும் கூட மொபைலை நொடிக்கு ஒருமுறை பயன்படுத்துவதை மறந்துவிட முடியாது. இது நாளுக்கு நாள் நம் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து வருகிறது. காலையில் கண்விழித்தவுடனே முதலில் செய்யும் செயல், மொபைல் எடுத்து மிஸ் கால்கள், மெசேஜ்கள், சமூகவலைதள அப்டேட்டுகள் (Update) பார்ப்பதுதான். வேலைகளுக்கிடையில் ஓய்வு நேரங்களில் கூட, நாம் மொபைல் திரையிலேயே நேரத்தை செலவிடுகிறோம். இரவு உறங்குவதற்கும் முன், பல மணி நேரம் யூடியூப் வீடியோக்கள், சீரியல்கள், மீம்ஸ்கள், அல்லது சமூக ஊடகங்களில் (Social Media) புழங்கும் பழக்கத்தை விடாமல் தொடர்கிறோம்.
இந்த நிலையில்,டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் ஹைடெல்பெர்க் மற்றும் கொலோன் பல்கலைக்கழகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர். அதன்படி மனிதர்கள் மூன்று நாட்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைத் தவிர்த்தால், அது மூளையின் டோபமின் மற்றும் செரடோனின் அமைப்புகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இவை, நிகோட்டின் அல்லது ஆல்கஹால் போன்ற போதைப்பொருள் அடிமைகளாக இருப்பவர்களுக்கு காணப்படும் மாற்றங்களை ஒத்ததாக இருக்கிறதாம்.
ஸ்மார்ட்போன் தவிர்த்தால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்
குறிப்பிட்ட இளைஞர்களை செல்போன் இல்லாமல் 72 மணி நேரம் இருக்க சொல்லியிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் அவசர தேவைகளான குடும்பத்தினருடன் போனில் பேசுவது, வேலை ஆகியவற்றிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருக்கின்றனர். இந்த 3 நாட்களில் எஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது அதில் 18 முதல் 30 வயதிற்குள் உள்ள 25 பேரின் மூளை செயல்பாடு, மூன்று நாட்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருந்தபோது பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்துவது, மூளை பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
போதைப்பொருள் அடிமைக்கு ஒத்த விளைவுகள்
ஆய்வில் கலந்து கொண்டவர்கள், 72 மணி நேர ஸ்மார்ட்போன் தவிர்ப்பிற்கு முன்பும் பின்பும், அவர்களின் மனநிலை, மொபைல் பழக்கவழக்கம், மற்றும் அதனை இழப்பதற்கான தேவை பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர். மூளை ஸ்கேன்களில், டோபமின் மற்றும் செரடோனின் செயல்பாடுகள் தொடர்பான பகுதிகளில் மாற்றங்கள் காணப்பட்டன. இதன் மூலம், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைப்பது, அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும், சாதாரணமாக பயன்படுத்துவர்களும், போதைப்பொருள் அடிமையிலிருந்து விடுபடும் போது ஏற்படும் தாக்கங்களை உருவாக்கக்கூடும் என்பதும் தெரியவந்தது.
குறிப்பாக சில சில நாட்களுக்கு ஸ்மார்ட் போன் பயன்பாட்டை தவிர்ப்பது கூட நமது மூளையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் சூழலில் டிஜிட்டல் பயன்பாடுகளை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்வது அவசியமாகிறது. இதனையடுத்து நமது செயல்பாடுகள் ஸ்மார்ட் போனை சார்ந்தே இருக்கின்றன. நமது வேலைகள் மிகவும் எளிதாக மாறியிருக்கின்றன. அவற்றை முற்றிலும் தவிர்ப்பது இன்றைய காலகட்டத்தில் இயலாத ஒன்று. ஆனால் நம் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை நாம் தேவைக்கேற்ப பயன்படுத்திவிட்டு, மற்ற நேரங்களில் அதன் பயன்பாட்டைக் குறைப்பது நமது உடல் நலனில் ஆரோக்கியமான மாற்றங்களை அது நிச்சயம் ஏற்படுத்தும்.