மாரத்தானில் மனிதர்களுடன் போட்டிபோட்ட ரோபோக்கள் – என்ன ஆச்சு தெரியுமா?
Marathon With Robots: சீனாவில் நடைபெற்ற மாரத்தானில் மனிதர்களுடன் 21 ரோபோக்களும் பங்கேற்றன. அதில் வெறும் 6 ரோபோக்கள் மட்டுமே இலக்கை அடைந்தன. மற்ற ரோபோக்களுக்கு என்ன ஆனது? இலக்கை அடைய முடியாமல் போனதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்
ஷங்கர் (Shankar) இயக்கத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்த எந்திரன் படத்தில் ரோபோக்களுக்கு ஃபீலிங்க்ஸ் வந்து விட்டால் என்ன ஆகும் என்பதை மிரட்சியுடன் பார்த்த நாம் இன்று அதை விட பல மடங்கு திறன் வாய்ந்த ரோபோக்களை பார்த்து வருகிறோம். சினிமாக்களில் மட்டுமே பார்த்த மனிதர்கள் மற்றும் ரோபோக்கள் இடையிலான மோதல்கள் தற்போது நிஜமாகி வருகின்றன. இந்த நிலையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், ஏப்ரல் 19, 2025 அன்று நடைபெற்ற யிசுவாங் மாரத்தான் (Marathon) போட்டியில், 21 மனித ரோபோக்கள், 12,000 ஓட்டப்பந்தய வீரர்களுடன் இணைந்து ஓடியது. இது உலகின் முதல் மனித – ரோபோ இணைந்த மாரத்தான் போட்டி என்று கூறப்படுகிறது. இதனை சீன மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
இந்த நிகழ்வில், DroidUP, Noetix Robotics மற்றும் பெய்ஜிங் ஹ்யூமனாய்டு ரோபோடிக் இனோவேஷன் சென்டர் போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் பங்கேற்றன. இதற்காக அந்த நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக ரோபோக்களை மாரத்தானில் கலந்துகொள்ள ஏதுவாக வடிவமைத்தனர். அவற்றில் சில மனிதர்களைப் போல தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. போட்டியில், Tiangong Ultra என்ற ரோபோட் 2 மணி நேரம் 40 நிமிடங்களில் பந்தயத்தை முடித்து, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது
போட்டியின் விதிமுறைகள்
இந்த போட்டியானது பாதுகாப்பாகவும் நியாயமாகவும் நடைபெற, குறிப்பிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டன. ரோபோக்கள் 0.5 முதல் 2 மீட்டர் உயரமுள்ள இரண்டு கால்கள் கொண்ட ஹ்யூமனாய்ட்களாக இருக்க வேண்டும். போட்டியின் நேர வரம்பு 3.5 மணி நேரம். பேட்டரி அல்லது ரோபோ மாற்றம் செய்ய அனுமதி இருந்தாலும், ஒவ்வொரு மாற்றத்துக்கும் தண்டனையாக போட்டியின் நேர வரம்பில் 10 நிமிடம் குறைத்துக்கொள்ளப்படும். எனவே போட்டியாளர்களின் வெற்றியும் தண்டனை நேரத்தை வைத்து தீர்மானிக்கப்படும் என்பதால், முதலில் முடித்தவரே வெற்றியாளர் என கருத முடியாது.
மனிதர்களுடன் போட்டிபோட்ட ரோபோக்கள்
The race begins. Robots are lined up in a zigzag formation and will start one by one, each setting off at one-minute intervals. The first to set off is Tiangong Ultra, developed by Beijing-based National and Local Co-built Embodied AI Robotics Innovation Center. pic.twitter.com/kBE1bXGHJa
— Sixth Tone (@SixthTone) April 19, 2025
இந்த நிகழ்வு ஒரு சாதாரண சோதனை அல்ல. இது சீனாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் வளர்ச்சியை உலகுக்கு காட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசாக 5,000 யுவான் (சுமார் ரூ.59,250), 4,000 யுவான் (சுமார் ரூ.47,400) மற்றும் 3,000 யுவான் (சுமார் ரூ, 35,550) வழங்கப்பட்டது. மேலும், புதுமை மற்றும் ஸ்டெமினா (stamina) ஆகியவற்றுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இத்தகைய போட்டிகள், தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமின்றி, மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான தூரத்தை குறைக்கும் முயற்சிகளாகவும் பார்க்கப்படுகின்றன.
இருப்பினும், 21 ரோபோக்களில் வெறும் ஆறு மட்டுமே பந்தய தூரத்தைக் கடந்தன. மற்ற ரோபோக்கள் பல முறை கீழே விழுந்தன. சில ரோபோக்கள் அதிக வெப்பம் காரணமாக செயலிழந்தன. மேலும் பேட்டரி மாற்றங்கள் போன்ற காரணங்களுக்காக சில ரோபோக்களுக்கு அடிக்கடி மனித உதவிகள் தேவைப்பட்டன.