வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா – ஐபோன் 16 ப்ரோவில் என்ன ஸ்பெஷல்?
iPhone 16 Pro Max: வெற்றிமாறனின் வழிகாட்டுதலில் MAMI Select: Filmed on iPhone என்ற போட்டியில் இளம் இயக்குநர்கள் iPhone 16 Pro Max கொண்டு குறும்படங்களை இயக்கினர். ஐபோனில் உள்ள வெவ்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்களுக்கு என புதிய திரை மொழியில் படங்களை உருவாக்கினர்.

வெற்றிமாறன்
கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன் (Vetrimaaran). அவர் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால் அவர் விடுதலை 2 (Viduthalai 2) பாகங்களை சேர்த்து வெறும் 7 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். ஆனால் தனது படைப்பின் தரத்தினால் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். அடுத்ததாக ஜல்லிக்கட்டு போட்டியை அடிப்படையாகக் கொண்டு சூர்யாவை (Suriya) வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்கான முன் கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் தயாரிப்பாளராக காக்கா முட்டை, லென்ஸ் போன்ற தரமான படங்களை தமிழுக்கு அளித்திருக்கிறார். அடுத்தாக இவரது தயாரிப்பில் பேட் கேர்ள் என்ற படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட் கேர்ள் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரியலிஸம், சமூக பார்வை, ஆழமாக கதை சொல்லும் விதம் என பல விஷயங்களை நேர்த்தியாகக் கூறும் வெற்றிமாறனின் பாணி, இளம் இயக்குனர்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் “MAMI Select: Filmed on iPhone” என்ற குறும்பட போட்டிக்கு வெற்றி மாறன் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். ஐபோன் மூலம் தரமான திரைப்படங்களை எளிதாக உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், நான்கு திறமையான இந்திய இயக்குநர்கள், iPhone 16 Pro Max மூலம் தயாரித்த குறும்படங்களை “MAMI Select: Filmed on iPhone” என்ற திட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ளனர். இந்த முயற்சியால், Apple நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், தனது புதிய சாதனங்களை பயன்படுத்தும் வாய்ப்பை இளம் இயக்குனர்களுக்கு வழங்கி வருகிறது.
ஐபோன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள்
Independent cinema took centre stage last night at the premiere of the four MAMI Select: Filmed on iPhone short films. Here are a few gracious words from our esteemed guests who champion the spirit of audacious storytelling and boundary-pushing craft. pic.twitter.com/99VQt1IiTH
— MAMI Mumbai Film Festival (@MumbaiFilmFest) April 16, 2025
இந்த வருடம் இந்த திட்டத்தில் பங்கேற்ற இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இயக்குநர் வெற்றிமாறன் இருந்திருக்கிறார். இதில் அம்ரிதா பக்சி, ரோஹின் நாயர், சணக்யா வ்யாஸ் மற்றும் ஷாலினி விஜயகுமார் ஆகிய நான்கு இயக்குனர்களும் ஒவ்வொருவரும் iPhone 16 Pro Max என்ற போனின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைத் தங்களது படைப்புகளில் பயன்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக சினிமாடிக் மோட், ProRes லாக், Action Mode மற்றும் 5x Telephoto லென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் அவர்கள் மாறுபட்ட காட்சிகளை உருவாக்கியிருக்கின்றனர்.
இதில் அம்ரிதா பக்சியின் ‘Tinctoria’ என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லரில் சினிமாடிக் மோட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரோஹின் நாயர், தனது ‘Kovarty’ படத்தில் கேரளாவின் பின்னணியில் பிரமாண்டமான தோற்றங்களை ProRes லாக் மூலம் ரசிக்கவைக்கிறார். சணக்யா வ்யாஸ், Action Mode-ஐ பயன்படுத்தி ஒரு 1000 அடி நீளமான டிராகிங் ஷாட்டை மிக சிறப்பாக படம் பிடித்துள்ளார். ஷாலினி விஜயகுமார் தனது ‘Seeing Red’ திரைப்படத்தில், 4K120 fps ஸ்லோ மோஷன் மூலம் பெண்களின் உணர்வுகளை மாஸ் சினிமா பாணியில் வெளிப்படுத்துகிறார். இந்த முயற்சி, வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் வழிகாட்டுதலால், எதிர்கால இயக்குனர்களை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.