கூகுள் பேயில் “Split The Bill” அம்சத்தை பயன்படுத்தி கட்டணத்தை பகிர்ந்துக்கொள்வது எப்படி?.. முழு விவரம் இதோ!
Google Pay Split The Bill | கூகுள் பே செயலி நொடி பொழுதில் பண பரிவர்த்தனை செய்ய மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி கட்டணத்தை பிரித்து செலுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா தொழில்நுட்ப (Technology) வளர்ச்சியில் மிகவும் வேகமாக முன்னேறும் நாடாக உள்ளது. அதுமட்டுமன்றி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை கட்டமைத்துக்கொள்கிறது. இதற்கு மிக சிறந்த உதாரணம் UPI (Unified Payment Interface) சேவை தான். இந்தியா மிக சீக்கிரமே யுபிஐ பண பரிவர்த்தனையை ஏற்றுக்கொண்டது. இந்தியாவை பொறுத்தவரை சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் பரவலாக யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது.
கட்டணத்தை பகிர்ந்து செலுத்த பயன்படும் அம்சம்
யுபிஐ சேவையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தினாலும், அதில் உள்ள சில சேவைகளை எப்படி பயன்படுத்துவது என பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. யுபிஐ சேவையை பயன்படுத்த இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) உள்ளிட்ட பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் மக்கள் அதனை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக்கொள்ளாமல் உள்ளனர். அவ்வாறு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படாத அம்சம் தான் ஸ்பிளிட் தி பில் (Split The Bill). இந்த அம்சத்தை பயன்படுத்தி ஒரு தொகையை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உடன் இணைந்து பகிர்ந்து செலுத்த முடியும். நண்பர்கள் உடன் உணவகத்திற்கு சாப்பிட செல்லும்போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Spilt The Bill அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
- இதற்கு முதலில் கூகுள் பே செயலியை திறக்க வேண்டும். அதில் பே காண்டாக்ட்ஸ் (Pay Contacts) என்ற அம்சத்தை கிளிக் செய்யுங்கள்.
- அதில் நியூ குரூப் (New Group) என்ற அம்சம் தோன்றும்.
- அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்கள் கூகுள் பே செயலியில் உள்ள தொடர்பு பட்டியல் (Contact List) தோன்றும்.
- அந்த பட்டியலில் நீங்கள் யார் யாருடன் கட்டணத்தை பகிர விரும்புகிறீர்கள் என்பதை கிளிக் செய்து ஒரு குழுவை உருவாக்க வேண்டும்.
- இதன் மூலம் நீங்கள் தேர்வு செய்த அனைவருக்கும் பணத்தை செலுத்துவதற்கான அழைப்பு சென்று சேர்ந்துவிடும்.
- அதன் மூலம் அவர்கள் தங்களது பங்கு பணத்தை செலுத்திவிடலாம்.
- இந்த அம்சம் மூலம் அனைவருக்குமான பங்கை நீங்கள் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தொகையை உள்ளிட்டதும் தானாகவே எத்தனை பேருக்கு தொகையை பிரிக்க வேண்டுமோ அதனை சரியாக பிரித்துவிடும்.
இந்த முறையை பின்பற்றி மிக சுலபமாக கூகுள் பேயில் கட்டணத்தை பகிர்ந்துக்கொள்ளலாம். பண பரிவர்த்தனையை சுலபமாக்க இந்த யுபிஐ அம்சம் பயன்பாட்டில் உள்ள நிலையில், அதனை மேலும் எளிமையாக்கும் விதமாக இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.