இந்த பாஸ்வேர்டுகளை 1 விநாடிக்குள் ஹேக் செய்ய முடியும் – முழு விவரம் இதோ
Password Safety Risk : இணைய பாதுகாப்பில் முக்கியமான பங்கு வகிக்கும் பாஸ்வேர்டுகளில், பலரும் '123456', 'password' போன்ற எளிய சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஹேக்கர்கள் வெறும் 1 விநாடிக்குள் உங்கள் கணக்குகளை ஹேக் செய்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரும் டிஜிட்டல் (Digital) முறைக்கு மாறிவிட்டோம். வங்கி (Bank) பணிகள் போன்ற நமது அனைத்து வேலைகளையும் இணையதளங்கள் வாயிலாகவே செய்து வருகிறோம். இணையதளங்களில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். இணைய பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் பாஸ்வேர்டுகள் (Passwords) தற்போது பலராலும் எளிதில் கண்டறியப்படும் நிலையில் உள்ளன. நம் வங்கிக் கணக்குகள் முதல் முக்கியமான இணையதளங்களில் நுழைய, பாஸ்வேர்டுகள் தான் முக்கிய பாதுகாப்பு அம்சமாக இருக்கின்றன. இருப்பினும், பெரும்பாலான நபர்கள் இன்னும் ‘123456’, ‘password’ போன்ற எளிய மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஹேக்கர்கள் ஒரு விநாடிக்குள் உங்கள் கணக்குகளில் நுழைய முடியும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நோர்ட்பாஸ் வெளியிட்ட எச்சரிக்கை
சைபர் பாதுகாப்பு நிறுவனமான நோர்ட்பாஸ்( NordPass) இந்தியா உட்பட 44 நாடுகளில் செய்த ஆய்வின் அடிப்படையில் உலகின் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மற்றும் மிகவும் எளிதில் கண்டறியக் கூடிய பாஸ்வேர்டுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ‘123456’, ‘password’, ‘qwerty123’ போன்றவை இடம்பிடித்துள்ளன. இவை அனைத்தும் ஒரே ஒரு விநாடிக்குள் ஹேக்கிங் செய்யப்படக்கூடியவையாகும்.
பொது மக்களும் நிறுவனங்களும் அதிகம் பயன்படுத்தும் 10 பாஸ்வேர்டுகள்:
-
123456
-
password
-
123456789
-
guest
-
qwerty
-
12345678
-
111111
-
123123
-
abc123
-
admin
இந்திய அரசின் கடவுச்சொல் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
இணையத்தில் பாதுகாப்பாக இருக்க, இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) வெளியிட்டுள்ள முக்கியமான வழிகாட்டுதல்கள் குறித்து பார்க்கலாம்.
-
குறைந்தது 8 எழுத்துகள் கொண்ட, கடினமான பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்.
-
பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்கள் மற்றும் சிறப்பு குறிகள் கலந்த பாஸ்வேர்டாக இருக்க வேண்டும்.
-
ஒரே பாஸ்வேர்டை பல கணக்குகளில் பயன்படுத்தக்கூடாது.
-
ஒவ்வொரு 120 நாட்களிலும் பாஸ்வேர்டு மாற்றப்பட வேண்டும்.
-
Multi-Factor Authentication வசதி இருந்தால் அதனைப் பயன்படுத்த வேண்டும்.
-
பாஸ்வேர்டுகளை புரொசரில் (browser) சேமிக்கவே கூடாது. அதை நோட்டில் எழுதி வைக்க கூடாது.
நவீன உலகில் டிஜிட்டல் பாதுகாப்பு என்பது வெறும் தனிப்பட்ட விருப்பமல்ல. அது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. எனவே பாஸ்வேர்டுகளை தேர்வு செய்யும் போது, எளிதானதாக அல்லாமல், பாதுகாப்பாக செயல்பட வேண்டும். பிறந்த தினம், பெயர் போன்ற எளிய தகவல்களை அடிப்படையாக வைத்து பாஸ்வேர்டு உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல், உங்கள் நிதி மற்றும் தனிப்பட்ட தரவுகள் ஒரே விநாடியில் ஹேக்கர்களின் கையில் சிக்கும் அபாயம் ஏற்படும். எனவே பாதுகாப்பான பாஸ்வேர்டுகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அவசியம். இந்த பதிவை புரிந்துகொண்டு பாதுகாப்பான இணைய பயன்பாட்டை மேற்கொள்ளுவோம்.