இனி ஸ்மார்ட் வாட்ச், கார்களிலும் ஜெமினி ஏஐ – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தகவல்
Gemini AI in Smartwatches : ஸ்மார்ட் வாட்சுகள், டேப்லெட்டுகள் மற்றும் கார்கள் போன்ற சாதனங்களிலும் ஜெமினி ஏஐ அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பம், கூகுள் பயன்பாட்டை மேம்படுத்தி, பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும். இது இந்த ஆண்டு இறுதிக்குள் பல சாதனங்களில் செயல்படுத்தப்படும் என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உறுதி செய்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
சமீபத்தில் அல்பபெட் (Alphabet) நிறுவனத்தின் முதலாவது காலாண்டு கூட்டத்தில், அதன் தலைமை இயக்குநர் சுந்தர் பிச்சை, கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) விரைவில் ஸ்மார்ட்வாட்ச்கள் (Smart Watch), டேப்லெட்டுகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட சாதனங்களில் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தினார். இதுவரை, கூகுள் ஜெமினியை தனது பல்வேறு செயலிகளான ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் உள்ளிட்டவற்றில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து சுந்தர் பிச்சை கூறியதுபடி, இந்த ஆண்டு கடைசியில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. விரைவில் அதன் பயனர்கள் தனது ஸ்மார்ட்போன், ஹெட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகளை ஜெமினி உதவியுடன் எளிதில் கையாளலாம்.
Wear OS இயங்குதளம் உடைய ஸ்மார்ட்வாட்சுகளில் கூடுதல் ஏஐ வசதிகளை அறிமுகப்படுத்துவதை கூகுள் இலக்காகக் கொண்டுள்ளது. இது, சாம்சங் Galaxy Watch மற்றும் OnePlus Watch போன்ற உயர் தர வாட்சுகளில் புதிய அனுபவத்தை உருவாக்கும்.
ஸ்மார்ட் வாட்சுகளில் ஜெமினி ஏஐ கொண்டு வருவதில் உள்ள சிக்கல்
-
ஸ்மார்ட்வாட்சுகளில் ஸ்டோரேஜ் மற்றும் செயல்திறன் குறைவாகவே இருக்கும். இதனால், முழுமையான ஏஐ செயல்பாடுகளை நேரடியாக இயங்கச்செய்வது சாத்தியமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
-
மேலும், பயனர்களின் உடல் ஆரோக்கியத் தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட டேட்டாக்களை ஜெமினி ஏஐ எவ்வாறு கையாளும் என்பது குறித்து கவலை அதிகரித்துள்ளன.
இப்போது, ஜெமினி செயலியில் பல லார்ஜ் லேங்குவேஜ் மாடல்கள் (LLM) கிடைக்கின்றன. இதில் Gemini 2.0 Flash முதல் Gemini 2.5 Pro மற்றும் 2.5 Flash போன்ற பரிசோதனை மாதிரிகள் அடங்கும்.
தனிப்பட்ட டேட்டாக்கள் பாதுகாக்கப்படுமா?
மேலும் இந்த புதிய வசதிகள் எப்போது முழுமையாக அறிமுகமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மே மாதம் நடைபெற உள்ள I/O மாநாட்டில் அல்லது புதிய பிக்சல் வாட்ச் வெளியீட்டில் அறிமுகப்படுத்தப்படாலம் என்று கூறப்படுகிறது. புதிய ஜெமினி ஏஐ, தற்போதைய கூகுள் அசிஸ்டன்டை விட எவ்வளவு மேம்பட்டதாக இருக்கும்? என பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்த மாற்றம் பயனர்களின் தொழில்நுட்ப அனுபவத்தை மேலும் உயர்த்தும் என்றும், தனிப்பட்ட டேட்டாக்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
கூகுள் ஜெமினி ஏஐ வாட்சுகள், டேப்லெட்டுகள் மற்றும் கார்களில் இணைக்கப்படுவது, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் முக்கியமான மாற்றமாகும். அதனாலும், உடல் நலம் குறித்த தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்திருக்கின்றன. கூகுள்,ஜெமினி ஏஐ அறிமுகப்படுத்தும்போது மேலும் தகவல்களைக் குறிப்பிடும், அதன் மூலம் அதன் நம்பகத் தன்மை குறி்தது நமக்கு விரிவாக சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.