ஸ்மார்ட்போனில் பேட்டரி பிரச்னையா? இந்த டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க!
Smartphone Battery Care : ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி என்பது இதயம் போன்றது. பேட்டரி பாதிக்கப்பட்டால் ஸ்மார்ட்போனின் செயல்திறன் பாதிக்கும். எனவே நமது ஸ்மார்ட்போன் பேட்டரியை முறையாக பராமரிப்பது எப்படி? அதன் ஆயுளை நீட்டிப்பது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மக்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான வேலைகளுக்கு அதனை நம்பி இருக்கிறோம். ஸ்மார்ட்போன்களில் பேட்டரியை (Battery) கையாள்வது தான் அதில் உள்ள பிரச்னை. பேட்டரியானது ஸ்மார்ட்போனின் இதயம் (Heart) போன்றது. அதனை முறையாக கையாள்வது அவசியம். ஒரு போனில் பேட்டரியில் பிரச்னை ஏற்பட்டால் மிகப்பெரிய தலைவலியைக் கொடுக்கும். குறிப்பாக நாம் ஏதாவது பணிகளில் ஈடுபட்டிருக்கும் முக்கியமான நேரங்களில் அது செயல்படாமல் போனால் நமக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அதன் காரணமாகவே ஒரு புதிதாக ஸ்மார்ட் போன் வாங்குகிறவர்கள் அதில் உள்ள பேட்டரியின் சார்ஜிங் அளவை தெரிந்துகொண்டே வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் பேட்டரியை பராமரிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
20% – 80% லெவலில் சார்ஜ் செய்யவும்
பேட்டரியின் ஆரோக்கியத்தைக் காக்க, அதனை முழுமையாக சார்ஜ் செய்யக் கூடாது. அதே போல போன் ஸ்விட்ச் ஆப் ஆகும் வரை அதனை பயன்படுத்தக் கூடாது. நமது ஸ்மார்ட்போனில் உள்ள சார்ஜ் 20% ஆனதும் சார்ஜ் செய்ய வேண்டும். அதே போல 80% சார்ஜ் ஆனதும் அதனை சார்ஜில் இருந்து நீக்கி விடவும்.
ஓவர்நைட் சார்ஜிங்கை தவிர்க்கவும்
நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு நமது ஸ்மார்ட் போனை இரவில் சார்ஜ் போட்டு தூங்கிவிட்டு காலையில் எடுப்பது. நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் சார்ஜில் இருந்தால் அதில் உள்ள பேட்டரி கடுமையாக பாதித்து அதன் செயல்திறன் குறையும். எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
‘Optimized Charging’ அம்சத்தை பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் உங்களது சார்ஜிங் பழக்கத்தை புரிந்து, அதன்படி சார்ஜ் செய்வதை கட்டுப்படுத்தும் Optimized Charging அம்சத்தை கொண்டுள்ளன. இது பேட்டரியின் ஆயுளை மேம்படுத்தும்.
ஹீட் காப்பது முக்கியம்:
நமது ஸ்மார்ட்போனை நேரடியாக வெயிலில் படும்படி சார்ஜ் செய்ய வேண்டாம். வெப்பம் பேட்டரிக்கு பெரிய எதிரி. அப்படி செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
தரமான சார்ஜர்கள் மற்றும் கேபிள்கள் பயன்படுத்தவும்
தரமற்ற சார்ஜர்கள், சார்ஜிங் கேப்ள்கள் நமது ஸ்மார்ட்போனின் பேட்டரியை முறையாக சார்ஜ் செய்ய முடியாமல் செய்வதுடன் பேட்டரியின் ஆயுளை பாதிக்கும். நமது போன் வாங்கும்போது கொடுக்கும் சார்ஜரையே பயன்படுத்த வேண்டும். ஒருவேளை சார்ஜர் பாதிக்கப்பட்டால் செலவைப் பார்க்காமல் ஒரிஜினல் சார்ஜரையே வாங்கி பயன்படுத்துவது நல்லது.
சார்ஜ் செய்யும் போது ஆப்களின் செயல்பாடை நிறுத்தவும்
மொபைலை சார்ஜ் செய்யும் போது அதிகமான அதிகமான ஆப்கள் செயல்பாட்டில் இருந்தால், பேட்டரியின் வெப்பம் அதிகரிக்கும். இதனால் பேட்டரி பாதிக்கப்படும்.
மேற்கண்ட முறைகளில் ஸ்மார்ட்போன் பேட்டரியை முறையாக பயன்படுத்தினால் நமது பேட்டரியின் ஆயுள் அதிகரிப்பது மட்டுமல்லாமல் நமது போனின் செயல்திறனும் அதிகரிக்கும்.