ஏசியை ஏன் வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும்? தவறினால் ஏற்படும் விளைவுகள்!
Annual AC maintenance: ஏசி என்பது தற்சமயம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. மேலும் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் ஏசி பயன்பாடு அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் ஏசியை வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்வதன் அவசியத்தையும் செய்யத் தவறினால் ஏற்படும் விளைவுகளையும் விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தமிழ்நாட்டில் கோடைகாலங்களில் (Summer) அதிகப்படியான வெப்பம் நாள் முழுவதும் நம்மை சோர்வடையச் செய்யும். இதனால் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு ஏசி (AC) மிகவும் முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக இன்றைய காலகட்டங்களில் ஏசி அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கிறவர்களுக்கும், அலுவலகங்களில் வேலை செய்கிறவர்களுக்கும் ஏசியின் தேவை இன்றியமையாததாக மாறியிருக்கிறது. வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கவும், வெப்பத்தின் காரணமாக ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தவிர்க்கவும் ஏசி அவசியம். ஏசியை வாங்கி பயன்படுத்துவது மட்டும் போதாது. அதை சரியான முறையில் பராமரிப்பதும் மிகவும் அவசியம். அதில் முக்கியமான ஒரு பகுதியாக வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்வது முக்கியம்.
நாம் பயன்படுத்தும் ஏசியை வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்வது அவசியம் என்பதை பலரும் அலட்சியம் செய்கிறார்கள். ஏசியை சர்வீஸ் செய்வதை தவிர்ப்பது உங்கள் ஏசியின் செயல்திறனையும், மின் கட்டணத்தையும், உடல்நலத்தையும் நேரடியாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஏசி சர்வீஸ் ஏன் அவசியம்?
ஏசியில் உள்ள ஃபில்டர்கள் மற்றும் காயில்கள் காலப்போக்கில் தூசியால் அடைத்துவிடும். இது காற்றோட்டத்தையும் குளிரூட்டும் திறனையும் குறைக்கும். சர்வீஸ் செய்யும்போது ஃபில்டர்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. ரெஃப்ரிஜிரண்ட் அளவு சரிபார்க்கப்படுகிறது. முக்கியமான பாகங்கள் சரியாக செயல்படுகிறதா என பரிசோதிக்கப்படுகிறது.
சர்வீசிங் இல்லாமல் விட்டால் என்ன ஆகும்?
அப்படி சர்வீஸ் செய்யாமல் விட்டால் சிறந்த குளிர்ச்சி கிடைக்காது. இதன் காரணமாக அதிக நேரம் பயன்படுத்துவோம் என்பதால் நம் வீட்டின் மின் கட்டணம் அதிகரிக்கும். திடீரென பிரேக் டவுனாக வாய்ப்பிருக்கிறது. ஏசியின் உட்பகுயில் பூஞ்சை மற்றும் தூசி சேர்ந்து காற்றின் தரம் பாதிக்கப்படும். இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்னைகள் ஏற்படலாம்.
எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும்?
கோடைகாலம் தொடங்கும் முன் வருடத்தில் குறைந்தது ஒரு முறை சர்வீஸ் செய்வதால் ஏசி பிரச்னையில்லாமல் நலமுடன் செயல்படும். தூசிக்கான தாக்கம் அதிகமுள்ள இடங்களில், வருடத்திற்கு இரண்டு முறை சர்வீசிங் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
ஏசியை சரியான நேரத்தில் பராமரிப்பதனால் சீரான குளிர்ச்சியை வழங்குவது மட்டுமல்லாமல், நீண்ட ஆயுள், குறைந்த மின் செலவு, மற்றும் நம்முடைய உடல்நலத்துக்கும் நல்லது. குறிப்பாக கோடைக்காலத்தில் ஏசியை அதிக நேரம் பயன்படுத்தும் சூழ்நிலையில், வருடத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்வது தேவையில்லாத செலவாக தோன்றலாம். ஆனால் அதன் பயன்கள் நீண்டகாலம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)