இலவச Wi-Fi பயன்படுத்தும் நபரா நீங்கள்.. உஷார்.. பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்!
Public Wi-Fi Security Issue | தற்போது ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது வெளிகளில் இலவச வைஃபை சேவை வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல ஆபத்துகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இன்டர்நெட் (Internet) இல்லை என்றால் உலகமே இல்லை என்ற சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. தொழில்நுட்ப துறை மட்டுமன்றி, உலகமே இணைய சேவையை சார்ந்துதான் இயங்கி கொண்டிருக்கிறது. இணைய சேவை மூலம் உலகமே உள்ளங்கைகளில் அடங்கிவிடும் என்றால் அது மிகை ஆகாது. பொதுமக்களின் அனறாட வாழ்விலும் இணைய சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது.
பொதுமக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட இணைய சேவை
முன்பெல்லாம், இணை சேவை எல்லோருக்கும் கிடைக்காது. யாரோ ஒருவர், அல்லது நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மட்டும் தான் இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போன்களின் அபார வளர்ச்சியால் பொதுமக்கள் இணைய சேவையை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். தங்களது நாள் தொடங்குவது முதல் முடிவது வரை அவர்கள் இணைய சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலான பொதுமக்கள் தடையற்ற இணைய சேவையை பெற வேண்டும் என்பதால், தங்களின் வீடுகளில் Wi – Fi இணைப்பை பெறுகின்றனர். இவ்வாறு வைஃபை பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், பொது இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றை பயன்படுத்துவன் மூலம் சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
பொது இட்ங்களில் வழங்கப்படு இலவச வைபை சேவை – தேடி வரும் ஆபத்துக்கள்
பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை சேவையை பயன்படுத்துவன் மூலம் பல சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
தகவல் திருட்டு
பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை சேவையை பயன்படுத்துவன் மூலம் உங்களின் தகவல்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட இவ்வாறு பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை சேவையை அபாயகரமானதாக கருதுகின்றன. எனவே, வைஃபை சேவையை பயன்படுத்தும் போது வங்கி சேவைகள் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.
தனிப்பட்ட தகவல்கள் கசிவு
பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை சேவையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் அத்தகைய இலவச வைஃபை சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரி, சமூக ஊடக கணக்குகள், கடவுச்சொற்கள் உள்ளிட்டவை திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மால்வேர் தாக்குதல்
இந்த இலவச வைஃபை சேவையை பயன்படுத்தும் பட்சத்தில் உங்கள் மொபைல் போன் மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை உங்கள் மொபைல் போன் மால்வேர் தாக்குதலுக்கு உள்ளானால் உங்களின் ஒட்டுமொத்த விவரங்களும் திருடப்பட்டு வங்கி கணக்கில் இருக்கும் பணம் முழுவதுமாக திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட இந்த சிக்கல்களை நீங்கள் சந்திக்காமல் இருக்க பொது இடங்களில் வழங்கப்படும் வைஃபை சேவை பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வது அவசியம் ஆகிறது. இல்லையெனில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.