கடுப்பேற்றும் சாட்ஜிபிடியின் புதிய அப்டேட் – தவறை ஒப்புக்கொண்ட சிஇஓ!

ChatGPT update issue : சாட் ஜிபிடியின் சமீபத்திய அப்டேட்கள் பயனாளர்களை கடுப்பேற்றும் வகையில் இருப்பதை ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஒப்புக்கொண்டுள்ளார். இதை சரிசெய்யும் பணியில் ஓபன் ஏஐ ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் மேம்பட்ட அனுபவத்தை வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

கடுப்பேற்றும் சாட்ஜிபிடியின் புதிய அப்டேட் - தவறை ஒப்புக்கொண்ட சிஇஓ!

மாதிரி புகைப்படம்

Published: 

29 Apr 2025 15:33 PM

ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட் ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு (AI)  பல வழிகளில் மக்களுக்கு உதவி வருகிறது. இது மனிதர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு பெரிதும் கைகொடுக்கிறது.  பயனர்களின் கேள்விகளுக்கு பல மொழிகளில் பதிலளிக்க, தகவல்களை பகிர, கட்டுரைகள் எழுத, கேள்விகளுக்குப் பதில் சொல்ல போன்ற பல செயல்களில் உதவுகிறது. சமீபத்தில் சாட்ஜிடி-4o என்ற அதன் சமீபத்திய அப்டேட் வெளியானது.  இது பயனர்களின் கேள்விகளை வேகமாக புரிந்துகொண்டு பதிலளிப்பது உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓபன் ஏஐ (​OpenAI) நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன் சமீபத்தில் சாட்ஜிபிடி-4o மாடல் தொடர்பான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சமீபத்திய அப்டேட்டுக்குப் பிறகு, இந்த ஏஐ மாடல் அதிகமாக புகழ்ந்து பேசுதல் மற்றும் எரிச்சலூட்டும் தன்மைகளைப் பெற்றுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பிரச்னையை சரிசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ChatGPT 4o: எரிச்சலூட்டுவதாக பயனர்கள் புகார்

GPT-4o மாடல் கடந்த மே 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது GPT-4 Turbo-வுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு வேகமாகவும், 50% குறைந்த செலவிலும் செயல்படுகிறது. மேலும், இது சிக்கலான புகார்களைத் தீர்க்க , நேரடி மொழிபெயர்ப்பு செய்ய போன்ற பல திறன்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில், படங்களை உருவாக்கும் திறனும் சேர்க்கப்பட்டது.

ஆனால், சமீபத்திய அப்டேட்டுகளுக்கு பிறகு, சாட்ஜிபிடி-4o மாடல் பயனர்களை மிகுந்த அளவில் புகழ்ந்து பேசும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால், பல பயனர்கள் இதை அதிகமாக புகழ்ந்து பேசுகிறது எனவும் மற்றும் எரிச்சலூட்டுகிறது எனக் கூறியுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில சாட்ஜிபிடி மெசேஜ்கள், இந்த AI மாடல் பயனர்களின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், எதையும் புகழ்ந்து பேசுவதாகக் காட்டுகின்றன.

சாம் ஆல்ட்மனின் பதில்

 

இந்தப் பிரச்சினையை ஒப்புக்கொண்ட ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மன், “சமீபத்திய GPT-4o அப்டேட்டுகள், AI மாடலை அதிகமாக புகழ்ந்து பேசும் மற்றும் எரிச்சலூட்டும் தன்மையைப் பெற்றதாக மாற்றியுள்ளன. இதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயனர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஓபன் ஏஐ நிறுவனம் எதிர்காலத்தில் பயனர்கள் தங்களிடம் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து AI மாடலின் தன்மையைத் தேர்ந்தெடுக்க முடியும் வகையில் பல தேர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காரணம்: மனித பின்னூட்டத்தின் தாக்கம்?

ஏஐ நிபுணர்கள், இந்த மாற்றம் “மனிதர்களின் மெசேஜ்களில் இருந்து கற்றதாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.  இதன் மூலம், AI மாடல்கள் மனித நோக்கங்களை புரிந்துகொண்டு அதனை பின்பற்றும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த முறையில் ஏற்பட்ட தவறுகள், AI மாடலை அதிகமாக புகழ்ந்து பேசும் தன்மையைப் பெறச் செய்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.