கோடைகாலங்களில் வீட்டின் எலக்ட்ரானிக் பொருட்களை பாதுகாப்பது எப்படி?
Summer Tips: கோடைகாலங்களில் மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகம் இருக்கும் என்பதால் அதனை முறையாக பராமரிப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். எந்தெந்த பொருட்களை எப்படி பராமரிப்பது என இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களது வீட்டு பொருட்களை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்.

மற்ற மாதங்களை விட ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் மின் சாதன பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும். கோடைகாலம் என்பதால் மின் விசிறி, பிரிட்ஜ், ஏசி (Air Conditioner) போன்றவற்றை வழக்கத்தை விட அதிகம் பயன்படுத்துவோம். நமது உடல் நிலையை எப்படி கவனித்துக்கொள்வது அவசியமோ அதே போல மின் சாதனங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் நமக்கு அதிக செலவு வைக்கும். இதன் பயன்பாடு அதிகம் இருப்பதால் முன் கூட்டியே அதனை பரமாரிப்பது அவசியம். இல்லையெனில் இந்த காலகட்டங்களில் திடீரென அவை பழுதானால் நமது பாடு திண்டாட்டமாகிவிடும். மேலும் அதிக வெப்பத்தின் காரணமாகவும் அவை பாதிப்படையலாம். அவற்றை பாதுகாப்பது தொடர்பாக வல்லுநர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட சில மின் சாதன பொருட்களை (Home Appliances) எப்படி பராமரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்
குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறை, குளிர்சாதன பெட்டியின் பின்புறம் உள்ள கண்டென்சர் காயில்களை தூசி மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். இது அதன் செயல்திறனை மேம்படுத்தும். கதவின் சீல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை சோதிக்க, ஒரு காகிதத்தை கதவுக்கிடையில் வைத்து மூடி, அதை இழுத்து பாருங்கள். எளிதில் இழுக்க முடிந்தால் அதன் சீலை மாற்ற வேண்டும்.
எலக்ட்ரானிக் பொருட்களை பராமரிப்பது அவசியம்
வெயில் காலங்களில் வாஷிங் மெஷினின் கதவு மற்றும் டிரம் இடையே உள்ள சீல் பகுதியில் அழுக்குகள் மற்றும் பூஞ்சைகள் சேர வாய்ப்பு அதிகம். எனவே இதை வாரந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அதிக வெப்பம் காரணமாக வாஷிங்மிஷினின் செயல்திறன் பாதிக்கப்படலாம். எனவே, ஒரே நேரத்தில் அதிக உடைகள் போடாமல் அதன் பயன்பாட்டை குறைப்பது நல்லது.
ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பிறகு, இண்டக்ஷன் ஸ்டவ் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் சேரும் எண்ணெய் மற்றும் உணவு அழுக்குகள் போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும். இது அந்த பொருட்களின் செயல்திறனை மேம்படுத்தும். மேலும் ஓவனின் வெப்பநிலை சரியாக இருக்கின்றதா என்பதை சோதிக்க, ஒரு தெர்மாமீட்டர் (thermometer) பயன்படுத்தி பரிசோதிக்கலாம். தேவையெனில், உற்பத்தியாளர் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றி வெப்பநிலையை சரிசெய்யலாம்.
ஏர் கண்டிஷனரின் ஃபில்டர்களை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். இது காற்றோட்டத்தை மேம்படுத்தும் என்பதால், அதன் செயல்திறனை உயர்த்தும். அதே போல மின் விசிறியையும் ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.
மின் சாதனங்களின் பாதுகாப்பு
காபி மேக்கர், டோஸ்டர், ஹேர் டிரையர் போன்ற சாதனங்களை பயன்படுத்திய பிறகு, அவற்றை ஆஃப் செய்து, பவர் கார்டுகளை அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும். இது தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும். இண்டக்ஷன் ஸ்டவ், குளிர்சாதன பெட்டி போன்ற சாதனங்களின் பின்புறம் மற்றும் கீழ் பகுதிகளில் தூசி மற்றும் அழுக்குகள் சேரலாம். அவற்றை ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.