அமெரிக்க மாணவர்களுக்கு Gemini Advanced இலவசம் – இந்தியர்கள் பயன்படுத்துவது எப்படி?
Gemini Advanced for Students: அமெரிக்காவில் கல்லூரி மாணவர்களுக்கு கூகிள் ஜெமினி அட்வான்ஸ்டை கூகுள் இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியா போன்ற வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் ஜெமினி அட்வான்ஸ்டை பெற விரும்பினால், கட்டண சந்தாவை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜெமினி அட்வான்ஸ்ட் (Gemini Advanced) என்பது கூகுளின் சக்தி வாய்ந்த ஏஐ (AI) மாடலாகும். இது ஜெமினி 2.5 ப்ரோ மூலம் இயங்குகிறது. இது பல மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு தேவையான தரவுகளை இதன் மூலம் எளிதாக பெற முடியும். பிடிஎஃப்களை பதிவேற்றி குறிப்பிட்ட பகுதிகளை ஹைலைட் செய்து அதில் உள்ள விஷயங்களை விவரமாக கேட்டு பெறலாம். மேலும் கூகுளுடன் இணைந்தே செயல்படுவதால் நம்பகமான தகவல்களை நமக்கு தேடி தருகிறது. இது நூற்றுக்கணக்கான ஆதாரங்களை விரைவாக ஆய்வு செய்து நமக்கு தேவைப்படும் தகவல்களை அளிக்கிறது. குறிப்பிட்ட பாடங்கள் அல்லது புத்தகங்களை இதன் உதவியுடன் சுருக்கமாக, அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூகுள், அதன் மேம்பட்ட ஏஐ தளமான ஜெமினி அட்வான்ஸ்டு , Whisk, NotebookLM Plus மற்றும் 2டிபி கிளவுட் சேமிப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. இந்த சேவை 2025 ஜூன் 30 க்குள் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. அவர்கள் அடுத்த 2026 ஜூன் 30 வரை இதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியா மாணவர்களுக்கு அது கிடைக்குமா?
தற்சமயம் இந்திய மட்டுமல்லாது வேறு எந்த நாட்டில் உள்ள மாணவர்களும் இந்த இலவச சேவையைப் பெற முடியாது. அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமே இந்த இலவச சேவையைப் பெற முடியும் . கூகிளின் விதிமுறைகளின் படி, மாணவர்கள் 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும், மேலும் .edu என்ற இமெயில் முகவரி அளிக்க வேண்டும். அவர்கள் அமெரிக்காவிலுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் படித்து வருபவர்கள் என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்திய மாணவர்களுக்கான மாற்று வழி
இந்திய மாணவர்கள் இந்த இலவச சேவையை பெற முடியாவிட்டாலும், அவர்கள் Google One AI Premium Plan க்கான சந்தாவைத் தேர்ந்தெடுத்து ஜெமினி அட்வான்ஸ்டை பயன்படுத்தலாம். இந்த சந்தா ரூ. 1,950 மாதத்திற்கு கிடைக்கின்றது. இது அமெரிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவிலும் கூகுள் இந்த இலவச சேவையை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய மாணவர்கள் வெறும் பாடத்திட்டத்தில் உள்ளதை மட்டும் படிக்காமல் தங்கள் துறை சார்ந்த ஞானத்தையும் அவர்களால் பெற முடியும். தற்சமயம் ரூ.1950 செலுத்தி அனைவராலும் கூகுள் ஒன் ஏஐ ப்ரீமியம் பிளானை பெற முடியுமா என்பது சந்தேகமே.