5 ஆண்டுகளாக தொல்லை கொடுத்த தாடை பிரச்னை.. 60 நொடிகளில் தீர்த்து வைத்த ChatGPT!
ChatGPT Solves 5-Year Old Jaw Problem in 60 Seconds | இளைஞர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக தாடை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அவர் செயற்கை நுண்ணறிவு சாட்ஜிபிடியில் தேடிய போது அது அவருக்கு அந்த பிரச்னைக்கான தீர்வை வழங்கியுள்ளது. இது குறித்து அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

மாதிரி புகைப்படம்
தொழில்நுட்பத்தின் (Technology) அபார வளர்ச்சியாகவும், முக்கிய மைல் கல்லாகவும் உள்ளது தான் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில்நுட்பம். இந்த அம்சம் மூலம் பல வேலைகளை மிக எளிதாக செய்து முடித்துவிட முடியும். குறிப்பாக, முன்பெல்லாம் பல மணி நேரம் செலவு செய்து செய்த ஒரு சில செயல்களை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மிக எளிதாக செய்து முடித்துவிட முடியும். பல தேவைகளுக்கு ஒரே தீர்வாகவும் இந்த செயற்கை நுண்ணறிவு உள்ளதால் ஏராளமான பொதுமக்கள், நிறுவனங்கள் என பலரும் இந்த அம்சத்தை பயன்படுத்துகின்றனர்.
ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சாட்ஜிபிடி
செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், பலரும் அதனை தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் சாட்ஜிபிடியை (ChatGPT) பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை தீர்த்துக்கொள்கின்றனர். இந்த நிலையில், செயற்கை நுண்ணறி அம்சம் மூலம் 5 ஆண்டுகளாக இருந்த தாடை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 ஆண்டுகளாக இருந்த தாடை பிரச்சனை – 60 நொடிகளில் தீர்வு சொன்ன சாட்ஜிபிடி
இளைஞர் ஒருவர் தனது 5 ஆண்டுகள் தாடை பிரச்சனையை சாட்ஜிபிடி வெறும் 60 நொடிகளில் தீர்த்து வைத்ததாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாடி பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாக கூறியுள்ளார். குத்து சண்டை வீரர் ஆன அவர், குத்து சண்டையினால் ஏற்பட்ட காயம் காரணமாக தாடையில் வலி இருந்திருக்கலாம் என நினைத்து வந்துள்ளார். இது குறித்து அந்த நபர் சாட்ஜிபிடியில் தேடியுள்ளார். அதற்கு சாட்ஜிபிடி ஒரு பயிற்சியை செய்ய சொல்லி உள்ளது. அந்த நபரும் சாட்ஜிபிடியின் அறிவுரையை பின்பற்றி அப்படியே செய்துள்ளார். அதனை செய்து முடித்ததும் உடனடியாக அவரது தாடை பிரச்சினை சரியானதை அவர் உணர்ந்ததாக பதிவிட்டுள்ளார்.
கிட்னி பிரச்னையை கண்டுபிடித்து சொன்ன சாட்ஜிபிடி
தனக்கு இருந்த இந்த பிரச்சனையை பல காலமாக மருத்துவர்கள் கூட கண்டுபிடிக்காத நிலையில், சாட்ஜிபிடி அதனை கண்டுபிடித்து வெறும் 60 நொடிகளில் அதற்கு தீர்வு வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த நபரின் பதிவு தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதேபோல ஒருநபர் தனக்கு பல நாட்களாக தீராத இடுப்பு வலி இருந்த நிலையில், அது குறித்து சாட்ஜிபிடியில் தேடி கிட்னியில் கல் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். தற்போது மேலும் ஒரு நபர் சாட்ஜிபிடி மூலம் தனக்கு 5 ஆண்டுகளாக இருந்த பிரச்சனை குணமடைந்துள்ளது என கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.