மதுரையில் சோகம்.. பூனை கடித்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?
Madurai Crime News : மதுரை மாவட்டத்தில் பூனை கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் தனியாக இருந்த இளைஞர், மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மதுரை, ஏப்ரல் 27 : மதுரையில் பூனை கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் மன உளைச்சலில் இருந்த நிலையில், மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பட்டப்படிப்பை முடித்த அவர், தினமும் எதாவது ஒரு வேலைக்கு சென்றுக் கொண்டு வந்திருக்கிறார். இவர் தனது வீட்டில் இரண்டு பூனைகளை வளர்த்து வந்துள்ளார். இந்த பூனைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை பூனை கடித்துள்ளது.
பூனை கடித்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
இதனால், அவருக்கு சிறு காயம் ஏற்பட்டதை அடுதது, டிடி ஊசி மட்டும் செலுத்தி கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பாலமுருகனுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், பாலமுருகன் சாப்பிடாமலும் இருந்துள்ளார்.
இதனை கவனித்த குடும்பத்தினர் உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு ரேபிஸ் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் குடும்பத்தினர், அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டிருக்கின்றனர்.
அப்போது, தனது காலில் பூனை கடித்துள்ளதை பாலமுருகன் கூறினார். படுத்துக் கொண்டு இருக்கும் காலில் இரண்டு பூனைகள் சண்டையிட்டுள்ளன. அப்போது, திடீரென பாலமுருகன் காலை பூனை கடித்துள்ளது. சிறிய காயம் ஏற்பட்டதால், டிடி ஊசி மட்டும் செலுத்தியதாக பாலமுருகன் கூறியுள்ளார்.
நடந்தது என்ன?
இதனை அறிந்து பெற்றோர், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ரேபிஸ் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, பாலமுருகன் ஆக்ரோஷமாக இருந்துள்ளார். இதனால், அவரை ரேபிஸ் நோய்க்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தனிமையில் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன், மருத்துவமனை அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தேகம் மரணம் என்று குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.
பூனை, நாய் போன்றவை கடித்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதற்கான தடுப்பூசியை செலுத்தி கெள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதை செய்யாமல், சிறிது காயம் என அலட்சியமாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)