பட்டப்பகலில் பயங்கரம்.. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. இளைஞர் தற்கொலை முயற்சி!
Salem Crime News : சேலம் மாவட்ட பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த இளைஞரும் தன்னுடைய கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மாதிரிப்படம்
சேலம், ஏப்ரல் 16: சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகாவின் மின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான சூர்யா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் 19 வயதான மோகன் பிரியன்.
கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து
இவர் கோரிமேட்டில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ படித்து முடித்தார். தற்போது வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது.
இருவரும் உறவிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணுடன் வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இதனால், அந்த இளைஞர் தன்னுடன் வருமாறு அந்த பெண்ணிடம் பலமுறை கூறியதாக தெரிகிறது.
இருப்பினும், இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று சேலம் பேருந்து நிலையத்தில், சூர்யாவை, இளைஞர் மோகன் பிரியன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தன்னுடன் வருமாறு மீண்டும் வற்புறுத்தி இருக்கிறார்.
இளைஞர் தற்கொலை முயற்சி
இதற்கு மறுத்த அந்த பெண்ணை, ஆத்திரத்தில் கத்தியால் குததியுள்ளார். பின்னர், தன்னுடைய கையை கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் மோகன் பிரியன். இதனால், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு சேலம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, 2025 ஏப்ரல் 15ஆம் தேதி பள்ளி வளாகத்தில் 8ஆம் வகுப்பு மாணவனை, சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த ஆசிரியரையும் அரிவாளால் அந்த மாணவன் வெட்டியுள்ளான். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த மாணவை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)