வீடு புகுந்து மூதாட்டி கொடூர கொலை.. தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய இளைஞர்.. போரூரில் ஷாக்!
Chennai Crime News : சென்னை போரூரில் 71 வயது மூதாட்டியை மூன்று சவரன் நகைக்கு ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். மூதாட்டியை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, அவரை தூக்கில் தொங்கவிட்டு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை கொலை செய்த இளைஞரை திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஏப்ரல் 25: சென்னை போரூரில் 70 வயது மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு சென்றுள்ளார். மேலும், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரனையும் இளைஞர் கொள்ளையடித்து சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் போரூர் பகுதியைச் சேர்ந்தவர் 71 வயதான மூதாட்டி காந்திமதி. இவரது தனது கணவர் இறந்ததில் இருந்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது மகன் தனது குடும்பத்துடன் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.
வீடு புகுந்து மூதாட்டி கொடூர கொலை
இந்த நிலையில், 2025 ஏப்ரல் 22ஆம் தேதி மூதாட்டி காந்திமதி நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால், பக்கத்து வீட்டில் இருக்கும் அவரது மகன் சந்தேகம் அடைந்தார். இதனை அடுத்து, வீட்டிற்கு சென்று சோதனையிட்டபோது, மூதாட்டி காந்திமதி தூக்கில் தொங்கிய நிலையில், கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த, மூதாட்டியின் மகன் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டி காந்திமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், மூதாட்டி காந்திமதியின் கழுத்தை இருந்து மூன்று சவரன் நகை காணாமல் போனதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர்.
தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய இளைஞர்
அப்போது, பிரேத பரிசோதனையில் மூதாட்டி காந்திமதி கழுத்தி நெரித்து கொலை செய்யப்பட்ட கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது, மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 20 வயதான அஜய் அவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரை தேடி வந்த நிலையில், திண்டுக்கல்லி கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து, மூன்று சவரன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அவரை சிறையில் அடைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்மையில், சென்னையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இந்த சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது. தொடர் செயின் பறிப்பு ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.