திருநெல்வேலி: மதுவில் மயக்கம்… இளைஞரை கொன்ற சிறுவர்கள்.. நடந்தது என்ன?

Tirunelveli Shocked: திருநெல்வேலியில் காதல் தொடர்பான விரோதம் காரணமாக 20 வயது ஆறுமுகம் கொலை செய்யப்பட்டார். 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் கடையில் மது அருந்தச் செய்து, பின்னர் இளைஞர் தோப்பில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி: மதுவில் மயக்கம்… இளைஞரை கொன்ற சிறுவர்கள்.. நடந்தது என்ன?

கொலை செய்யப்பட இளைஞர் ஆறுமுகம்

Updated On: 

09 Apr 2025 07:45 AM

திருநெல்வேலி ஏப்ரல் 09: திருநெல்வேலியில் (Tirunelveli) காதல் தொடர்பாக 20 வயது இளைஞர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். குருநாதன் கோயில் அருகே ரத்தம் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை (Police investigation) நடத்தினர். டவுன் பகுதியைச் சேர்ந்த சுடலை சிவா என்பவர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, உடல் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டது. ஆறுமுகம், ஒரே குழுவைச் சேர்ந்த சிறுவனின் தங்கையை காதலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுடலை சிவா மற்றும் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக குருநாதன் கோயில் அருகே, ஒரு இளைஞர் கொலை ( Tirunelveli Youth Murder)  செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதல் விவகாரம் தொடர்பான சிக்கல் இந்த கொலையின் பின்னணியில் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு வந்த தொலைபேசி அழைப்பு

குருநாதன் கோயில் அருகே, ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. முதலில் எந்தவிதமான உடலும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து போலீசார், தகவல் வழங்கியவர் யார் என்பதை விசாரிக்க, தொலைபேசி ட்ரேசிங் மூலம் டவுன் ஜெபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தகவல் கொடுத்தது தெரியவந்தது.

அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார், குருநாதன் கோயில் அருகே உள்ள முட்புதரில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு உடலை கண்டுபிடித்து தோண்டி எடுத்தனர்.

அடையாளம் காணப்பட்ட உடல், கொலையின் பின்னணி

மரணமடைந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் ஆறுமுகம் (20) என அடையாளம் காணப்பட்டார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

காதல்: பழிவாங்கும் கொலைதான் பின்னணி

தொடர்ந்த விசாரணையில், ஆறுமுகம் ஒரு சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், அந்த சிறுமியின் அண்ணன் உறவுமுறை கொண்ட 17 வயது சிறுவனுக்கு இது பிடிக்காமல் இருந்ததாகவும் தெரியவந்தது. தன் தங்கையுடன் பழகுவதை நிறுத்துமாறு கூறியும், ஆறுமுகம் தொடர்ந்து பழகியதை காரணமாகக் கொண்டு, அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

மதுவில் மயக்கம்… பின்னர் இளைஞர் கொலை

2025 ஏப்ரல் 7 ஆம் தேதி ஆறுமுகத்தை டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்று, மது அருந்தச் செய்தனர். பின்னர் அருகிலுள்ள தோப்பில் கொண்டு சென்று, போதையில் இருந்த அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். உடலை தென்னை ஓலைகளால் மூடிச் சென்றுவிட்டு, இரவு வந்ததும் மீண்டும் வந்து உடலை குழி தோண்டி புதைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, 21 வயதான சுடலை சிவா மற்றும் 3 சிறுவர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் சிறுவர்கள் இளைஞரை கொலை செய்திருப்பது திருநெல்வேலி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.