Theni: கர்ப்பத்தை மறைத்து கல்யாணம்.. தேனி மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தேனியில் மனைவியை காணவில்லை என சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த கணவருக்கு, மனைவி வேறொரு காவல் நிலையத்தில் தனக்க்கு பிறந்த குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டதும், காப்பகத்தில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. கடைசியில் அந்த பெண்ணின் விருப்பப்படி குழந்தை போலீசார் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

தேனி, ஏப்ரல் 13: தேனி மாவட்டத்தில் (Theni District) மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய மனைவி வீடு திரும்பாத நிலையில் காவல் நிலையம் சென்று புகாரளித்த கணவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திருமணங்கள் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் பணம், நகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக அத்தகைய திருமண மோசடியில் (Marriage Scam) ஆண், பெண் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் இப்படியாக நடப்பது சமூகத்தில் அதிகரித்து வருவது மக்களிடையே கவலைகளை உண்டாக்கி வருகிறது. இதனால் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதை தாண்டி நன்கு அறிமுகமான நபருடன் ஏற்படும் காதல் திருமணத்தை தான் இளம் சமூகத்தினர் விரும்புவதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு 40 வயதான நிலையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நபருக்கு அதுதான் முதல் திருமணம் என்ற நிலையில் அதே வயதுடைய மணப்பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து அவரின் இரண்டு கணவர்களும் இறந்து விட்டதாக சொல்லப்பட்டிருந்தது.
காட்டிக்கொடுத்த வயிறு
பெண்ணின் நிலைமை எதுவாக இருந்தாலும் சரி என அந்த நபரும் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது பெண்ணின் வயிறு பெரிதாக இருந்துள்ளது. இது தொடர்பாக மாப்பிள்ளை கேட்டபோது தனக்கு தொப்பை இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் மாதங்கள் சென்ற நிலையில் வயிறு மேலும் பெரிதாக இருந்ததால் சந்தேகமடைந்த அவர் தனது மனைவி அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை செய்தார்.
அப்போது அப்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தொழிலாளி திருமணத்திற்கு முன்பே அந்த பெண் கர்ப்பமாக இருந்ததை பற்றி அறிந்து கொண்டார். இருந்தாலும் பெருந்தன்மையாக அந்த பெண்ணின் சூழலை ஏற்றுக் கொண்டு அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.
காணாமல் போன மனைவி
இந்த நிலையில் 2025 மார்ச் மாதம் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில நாட்களான நிலையில் ஒருநாள் குழந்தையை வீட்டில் இருந்து தனது கணவரிடம் விட்டு விட்டு மருத்துவமனைக்கு சென்று பிரசவத்தின் போது போடப்பட்ட தையலை பிரித்து விட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
சரி என அவரை அனுப்பி வைத்த அந்த தொழிலாளி நீண்ட நேரமாகியும் மனைவி வீடு திரும்பாததால் பதற்றத்துடன் இருந்துள்ளார். கைக்குழந்தை என்பதால் பசியால் கதறி அழுததை சமாளிக்க முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். பல இடங்களில் தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் இது தொடர்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் அந்த தொழிலாளி புகார் அளித்தார். இதன் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை தேடி வந்த நிலையில் அவர் ஒரு காப்பகத்தில் இருப்பது தெரிய வந்தது.
நொந்துப்போன கணவர்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரித்த போது அந்த பெண் வீட்டில் இருந்து வெளியேறி மற்றொரு காவல் நிலையத்திற்கு சென்று தனது குழந்தையை தன்னிடம் பெற்றுக் கொடுக்குமாறு முறையிட்டதாகவும், அதற்கு போலீசார் அறிவுரை கூறிய காப்பகத்தில் சேர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனக்கு கணவருடன் இணைந்து வாழ விருப்பமில்லை என்றும், குழந்தையை மட்டும் கொடுக்கும்படியும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் விருப்பத்தின் பேரில் கணவரிடமிருந்து குழந்தையை பெற்று போலீசார் ஒப்படைத்தனர். அந்த தொழிலாளி மனைவியின் சூழல் அறிந்தும் அவருடன் வாழ தயாராக இருந்த நிலையில் தன்னை இப்படி ஏமாற்றி விட்டாரே என நொந்தபடி அங்கிருந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.