5 மாத குழந்தையை கொன்ற தாய்.. தண்ணீர் பேரலில் மூழ்கடித்த கொடூரம்.. புதுக்கோட்டையில் பகீர்
Pudukkottai Crime News : புதுக்கோட்டையில் பெற்ற தாயே 5 மாத குழந்தையை கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 மாத குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். குழந்தை மீது கணவர் அதிகமாக அன்பு காட்டியதால், குழந்தையை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தையை கொன்ற தாய்
புதுக்கோட்டை, ஏப்ரல் 08: புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 மாத குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 மாத குழந்தையை பேரலில் மூழ்கடித்து தாய் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவரது மனைவி லாவண்யா (20). இந்த தம்பதிக்கு 5 மாத குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தது முதலே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
5 மாத குழந்தையை கொன்ற தாய்
இதற்கிடையில், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், லாவண்யா தனது தாய் பொன்னருப்பு வீட்டில் வசித்து வந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில், 2025 ஏப்ரல் 6ஆம் தேதி இரவு லாவண்யா குழந்தையுடன் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் லாவண்யா கழுத்தில் இருந்து செயினை பறித்து கொண்டு, குழந்தையையும் கொண்டு சென்றனர்.
இதனால், லாவண்யா கூச்சலிட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தின் உடனே சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அப்போது, குழந்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள தண்ணீர் பேரலில் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.
தண்ணீர் பேரலில் மூழ்கடித்த கொடூரம்
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொடங்கினர். அப்போது, சந்தேகத்தின்பேரில் லாவண்யா, அவரது கணவர் மணிகண்டன், தாய் பொன்னருப்பு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்.
அப்போது, லாவண்யாவிடம் தீவரமாக விசாரித்ததில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, தனது 5 மாத குழந்தையை கொன்றதை லாவண்யா ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, குழந்தை பிறந்ததில் இருந்தே கணவர் என் மீது அன்பாக இல்லாமல், குழந்தை மீது பாசமாக இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்து, குழந்தையையை தண்ணீர் பேரலுக்குள் மூழ்கடித்து கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்தார். மேலும், தன்னுடைய நகையை வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் லாவண்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே 5 மாத குழந்தையை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அண்மையில் கூட, ஆந்திராவில் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தார். அவர் ரஞ்சிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆசிரியராக பணிபுரியும் அவர், வேறொரு நபரை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னுடைய 3 குழந்தைகளை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. 3 குழந்தைகளையும் டவல் ஒன்றால் மூக்கை பொத்தி மூச்சுத்திணறடித்து கொலை செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து போலீசார் ரஞ்சிதாவை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.