”கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்” சிக்னல் கொடுத்த திருமா.. என்ன மேட்டர்?
VCK Thirumavalavan : பாட்டாளி மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இடம்பெறும் எந்த கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம்பெறாது என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 27: பாட்டாளி மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இடம்பெறும் எந்த கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம்பெறாது என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், தமிழக வெற்றிக்கழக கட்சியுடன் சேரும் வாய்ப்பும் எங்களுக்கு இருந்தது என்றும் அந்த கதவை நான் மூடினேன் என்றும் திருமாவளவன் பேசியுள்ளார். 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
”கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்”
இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, கூட்டணி சலசலப்புகள் நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் பாஜக அதிமுக கூட்டணி உறுதியானது. சமீப நாட்களாகவே திமுக கூட்டணியில் பாமக சேர விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
ஆனால், இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். புதுச்சேரியில் அம்பேத்கர் அவர்களின் திரு உருவச் சிலையை திறந்து வைத்து அந்நிகழ்வில் திருமாவளவன் பேசியுள்ளார்.
அந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், “அதிமுகவை போன்று விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் கூட்டணி தர்மத்திற்காக மூடிவிட்டேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகளை கூறி என்னை வீழ்த்திட முடியாது.
என்ன மேட்டர்?
பாஜகவும், பாமகவும் இருக்கும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது. இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல இந்த திருமாவளவன்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால், விசிக வெளியேறும் என்பது தான் உண்மை என்று அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், அண்மையில் கூட திமுக தலைவர் ஸ்டாலின் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாக வரும் தகவல் வதந்தி தான் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணில் பாமக இடம்பெறாது என்பது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் சரியாக ஓராண்டு இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி கணக்குள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைக் காலத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் விசிக கூட்டணி வைப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், தவெக கட்சியுடன் கூட்டணி வைக்கவும் திருமாவளவன் மறுத்ததாக தற்போது தெளிவுப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.