பாஜகவுடன் கூட்டணி.. அதிமுகவின் அடுத்த கட்டம் என்ன? அரசியல் வல்லுநர்கள் சொல்வது இதுதான்!
BJP AIADMK Alliance: 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேசிய அளவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் பல விதமான பின்னடைவுகளை சந்தித்துள்ளன. இதனால், அதிமுகவும் அதே நிலையை சந்திக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

அதிமுக பாஜக கூட்டணி
சென்னை, ஏப்ரல் 12: தமிழகத்தில் 2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் (Tamil Nadu Election 2026) நடக்க உள்ளது. இதனால், இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. பாஜக உடன் அதிமுக கூட்டணி (AIADMK BJP Alliance) அமைக்கும் என சில மாதக்ஙளாகவே பேசப்பட்டு வந்த நிலையில், 2025 ஏப்ரல் 11ஆம் தேதி அமித் ஷாவின் வருகையால் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, 2026 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி போட்டியிடும் என அமித் ஷா அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. அந்த தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், 2024 லோக் சபா தேர்தலில் தனித்தே களம் கண்டது.
இனி பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு பாஜகவுடன் கை கோர்த்துள்ளார். ஆனால், இந்த கூட்டணி அதிமுகவுக்கு எந்த அளவுக்கு சாதமாக சூழலை உருவாக்கி தரும் என்பது கேள்விக்குறிதான்.
ஏனென்றால், தேசிய அளவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளன. குறிப்பாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பெரும் பிளவை சந்தித்துள்ளது. அடுத்ததாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தொடர்ந்து பலவீனம் அடைந்து வருகிறது.
அதேபோல, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அதிமுகவும் எந்த மாதிரியான நிலைக்கு செல்லும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு பெரிய அளவில் செல்லவில்லை என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் 12 சதவீதம் வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்களது வாக்குகள் பொதுவாக திமுக, அதிமுக என பிரியும்.
அதிமுகவின் அடுத்த கட்டம் என்ன?
ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், இந்த மொத்த வாக்குகளும் திமுகவுக்கு செல்லும் என நம்பப்படுகிறது. மேலும், சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என பிரிந்து கிடக்கும் அதிமுக, தற்போது மேலும் ஒரு பிளவை சந்திக்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான உறவில் விரிசல் இருப்பதாக வெளிப்படையாக தெரிகிறது. இதனால், அதிமுகவிலேயே குழப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அதிமுகவுடன் ஒன்று சேர்ந்தால் அதிமுகவுக்கு பாசிட்டிவாகவே இருக்கும்.
ஏனென்றால், தென் தமிழகத்தில் அதிமுக தற்போது பலவீனமாகவே கருதப்படுகிறது. இவர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு விழும் பட்சத்தில், அது எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கையை தரலாம். ஆனால், பாஜகவால் அதிமுக மேலும், பலவீனப்படுத்தப்படும் என்றே அரசியவல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் தாங்கள் வரவே பாஜக விரும்புகிறது. ஆகவே, இந்த கூட்டணியால் அதிமுகவுக்கு என்ன லாபம் இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.