Waqf Amendment Bill 2025: வக்ஃப் மசோதா குறித்து அறிக்கை! முதலில் சட்டத்தை படிங்க விஜய் சார்.. H.ராஜா விமர்சனம்!
H. Raja's Criticism of TVK Leader Vijay: நடிகர் விஜய் கொஞ்சமாவது சட்டங்களையும், விதிகளையும் படிக்க வேண்டும். படித்துவிட்டு அரசியலுக்கு வாருங்கள். வக்ஃப் திருத்த மசோதா வந்ததுக்கு காரணமே திருச்சிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய திருச்செந்துறையில் உள்ள ஒரு சிவன் கோயில் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று H. ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் -H. ராஜா
சென்னை, ஏப்ரல் 8: நாடாளுமன்றத்தின் (Parliament) இரு அவைகளிலும் நீண்ட விவாதத்திற்கு பிறகு, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு மசோதா 2025 குடியரசு தலைவர் முர்மு ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக மாறியது. இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த 2025 ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒப்புதல் அளித்தார். முன்னதாக, வக்ஃப் திருத்த மசோதா (Waqf Amendment Bill 2025) 2025 ஏப்ரல் 3ம் தேதி மக்களவையிலும், 2025 ஏப்ரல் 4ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றபட்டது. இந்த சட்டத்தில் பல முக்கிய விதிகள் சேர்க்கப்பட்டும், பல விதிகள் திருத்தப்பட்டன. அதன்படி, இதன் கீழ் வக்ஃப் வாரியம் இனி எந்த சொத்தையும் தன்னிச்சையாக உரிமை கோர முடியாது. ஏதேனும் தகராறு ஏற்பட்டால் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வக்ஃப் திருத்த மசோதா 2025 ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தார். இந்தநிலையில், தவெக தலைவர் விஜயை பாஜக மூத்த நிர்வாகி H.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
H.ராஜா விமர்சனம்:
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த H.ராஜா, “ நடிகர் விஜய் கொஞ்சமாவது சட்டங்களையும், விதிகளையும் படிக்க வேண்டும். படித்துவிட்டு அரசியலுக்கு வாருங்கள். வக்ஃப் திருத்த மசோதா வந்ததுக்கு காரணமே திருச்சிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய திருச்செந்துறையில் உள்ள ஒரு சிவன் கோயில் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று கூறினார்கள். நான் இதற்கு எதிராக போராட்டம் செய்தேன். இதை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குறிப்பிட்டார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த மசோதாவில் முஸ்லிம்களுக்கு எதிராக என்ன உள்ளது என்பதை சொல்ல வேண்டும்..? வக்ஃப் திருத்த மசோதா குறித்து புஸ்ஸி ஆனந்துக்கு ஒன்றுமே புரியவில்லை.
வக்ஃப் திருத்த மசோதா குறித்து புஸ்ஸி ஆனந்த் ஒரு பாயிண்டாவது சொல்ல வேண்டும் இல்லையா..? அரசியல் கட்சியின் பொதுசெயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்துக்கு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இந்துகளின் கோயில்கள், வீடுகள் மற்றும் நிலங்கள் என 50,834 சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளது. 100 பேர் 12 லட்சத்திற்கும் அதிகமான சொத்துகளை ஆக்கிரமித்து அவர்களது சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நாடாளுமன்றத்தில் வக்ஃப் மூலம் முஸ்லிம் ஏழைகள், முஸ்லிம் விதவைகள் என யாராக்காவது உதவி செய்தீர்களா என கேட்டால் இல்லை. இந்த சட்டத்தை பற்றி தெரியாத அரசியல் தற்குறிகள்தான் இந்த சட்டத்தை எதிர்க்கும். அந்த தற்குறிகளில் என் ஊரை சேர்ந்த சிதம்பரமும் இருக்கிறார் என்பதுதான் வருத்திற்குரிய விஷயம்” என்று தெரிவித்தார்.