தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Vijaya Prabhakaran DMDK : தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில், அக்கட்சி பொதுச் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய பிரபாகரன்
சென்னை, ஏப்ரல் 30 : தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் (தேமுதிக) இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியன் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார். மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன். இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொருளாளராக பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்
மேலும், கழக அவைத் தலைவராக இளங்கோவன், கழக தலைமை நிலையச் செயலாளராக பார்த்தசாரதி, கழக கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம், மோகன்ராஜ், கழக துணைச் செயலாளராக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில் குமார், சுபர ரவி ஆகியோரை நியமித்து பொதுச் செயலாளர் பிரேமலா விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு, பொதுக் குழு கூட்டம் 2025 ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு 2000க்கும் மேற்பட்டே உறுப்பினர்கள் வருகை தருவார்கள் என கூறப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, முதல்முறையாக அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தேமுதிகவின் 19 வது பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேமுதிக இளைஞரணி செயலாளராக கேப்டன் அவர்களின் புதல்வன்
“விஜய பிரபாகர்” அவர்கள் நியமனம்.தொண்டர்களின் கோரிக்கையை ஏற்ற எங்களின் அண்ணியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
2026 தேர்தலில் தேமுதிக வின் வெற்றிக்கு தேமுதிக இளைஞரணியின் பங்கு மகத்தானதாக இருக்கும்.#DMDK#DMDKITWING… pic.twitter.com/enBaXOVPNH
— S.Prabhakaran (@sprabhakaran792) April 30, 2025
இந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது. அதன்படி, இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, தேமுதிகவின் கட்சி உறுப்பினராக மட்டுமே விஜய பிரபாகரன் செயல்பட்டு வந்தார். கடந்த 2024 லேக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு விஜய பிரபாகரன் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், விஜய பிரபாகரனுக்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் நடக்கும் பொதுக்குழு செயற்குழுவில் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு எடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய பொதுக் செயலாளர் பிரேமலதா, “தொண்டர்களின் எதிர்பார்ப்பை அடுத்து, இளைஞரணி பதவி விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது அட்சய திருதியை நல்ல நாளில் கேப்டனின் மோதிரத்தை விஜய பிரபாகரனுக்கு வழங்குனேன். நானும் (பிரேமலதா), விஜய பிரபாகரனும் அனைத்து தொகுதிகளுக்கும் செல்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.