பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சி? – அகில இந்திய முஸ்லீம் ஜமாத் கண்டனம்

AIMIM Leader Targets Vijay: பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை அவர் தவறாக சித்தரித்திருப்பதாகவும் இதனால் இஸ்லாமியர்கள் மீது தவறான எண்ணம் உருவாக காரணமாக அமைந்திருப்பதாகவும் அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தவெக தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சி? - அகில இந்திய முஸ்லீம் ஜமாத் கண்டனம்

விஜய்

Published: 

16 Apr 2025 22:50 PM

கடந்த 2025, ஏப்ரல் 4 ஆம் தேதி, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் (Waqf) திருத்த மசோதாவை சமர்ப்பித்தது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு 128 பேர் ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். தொடர்ந்து, மக்களவையிலும் விவாதங்களுக்குப் பிறகு 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 பேர் எதிராகவும் வாக்களிக்க மசோதாவை நிறைவேற்றினர். இதனையடுத்து 2025, ஏப்ரல் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu) இதற்குத் தனது ஒப்புதலை வழங்கியதை அடுத்து, இது சட்டமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay), மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா, முஸ்லிம் சமூகத்திற்குத் துரதிருஷ்டவசமானது என்றும், அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் விஜயின் மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து விஜய் தனது அறிக்கையின் மூலம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். முக்கியமாக, எம்.பி.க்கள் முகமது ஜாவேத், இம்ரான் பிரதாப்கர்ஹி, சந்திரசேகர் ஆசாத், அமனுல்லா கான், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர்  வக்ஃப் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். அதே நேரத்தில், வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், இந்த மசோதா எந்தவொரு சமூகத்தினரின் உரிமையையும் மீறவில்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவிற்கு எதிராக தவெக வாதம்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அபிஷேக் சிங் தனது வாதத்தை எடுத்துரைத்தார் அப்போது பேசிய அவர், “வக்ஃப் சொத்து இவை என்பதை ஆட்சியர்கள் முடிவு செய்வது இயலாத காரியம்; அதில் பல பிரச்னைகள் உள்ளன; வக்ஃப் சட்டத் திருத்தத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய திருத்தங்கள் உள்ளன, அவை குறிப்பிட்ட மதத்தினரை ஒடுக்குவதாக உள்ளன என்றார்.

இந்த நிலையில் இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் நடந்த இப்தார் விருந்தை கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்திருக்கிறார்.

பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சி?

தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜய்யின் செயல்பாடுகள் இருக்கிறது. அவரது பின்னணி மற்றும் செயல்பாடுகள் இஸ்லாத்திற்கு எதிரானது. விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை அவர் தவறாக சித்தரித்திருக்கிறார். இதனால் இஸ்லாமியர்கள் மீது தவறான எண்ணம் உருவாக காரணமாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிலையில் ஷஹாபுதீன் ரஸ்வியின் பேச்சு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.