Thirumavalavan: கட்டாயப்படுத்துகிறார்கள்! கட்சி பணியை செய்ய முடியவில்லை.. நிர்வாகிகளிடம் திருமாவளவன் கோரிக்கை!

VCK's Thirumavalavan on DMK Alliance: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கூட்டணியில் தொடரும் எனத் தலைவர் திருமாவளவன் உறுதி அளித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஃபேஸ்புக் நேரலைப் பேட்டியில், கட்சிக்குள் உள்ள அழுத்தங்கள் குறித்தும், கூட்டணித் தந்திரோபாயங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்காரர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Thirumavalavan: கட்டாயப்படுத்துகிறார்கள்! கட்சி பணியை செய்ய முடியவில்லை.. நிர்வாகிகளிடம் திருமாவளவன் கோரிக்கை!

திருமாவளவன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published: 

20 Apr 2025 16:33 PM

சென்னை, ஏப்ரல் 20: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election 2026) இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், ஒரு சில அரசியல் கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் மதசார்ப்பற்ற கூட்டணிக்கு திராவிட முன்னேற்ற கழகம் (Dravida Munnetra Kazhagam) தலைமை தாங்கி வருகிறது. இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்குள் அவ்வபோது சில சலசலப்புகள் எழுந்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் (Thirumavalavan) திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

நேரலையில் பேசிய திருமாவளவன்:

திமுக கூட்டணி குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேஸ்புக் நேரலையில் பேசியதாவது, “விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் என்னை பங்கேற்க வைப்பது அதிக மன அழுத்தத்தை கொடுக்கிறது. எனக்கு ஒருநாள் கூட ஓய்வு என்பது கிடையாது. ஒரு மணிநேரம் கூட எனக்கு தனிமை என்பதே இல்லை என்கிற நிலை நீடிக்கிறது.

மணி கணக்கில், நாள் கணக்கில் கிடையாய் கிடந்து அதிகம் அழுத்தம் கொடுத்து, மஞ்சள் நீராட்டு விழா, திருமண நிகழ்ச்சிகளில் அழைத்து செல்வதில் நமது கட்சிக்காரர்கள் குறியாக இருக்கிறார்கள். 24 மணிநேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால், கட்சி பணிகளில் என்னால் கவனம் செலுத்த முடியாவில்லை. எந்த நிபந்தனையும் இல்லாமலும், எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு ஒரு துணிச்சல், தொலைநோக்கு பார்வை, தெளிவு வேண்டும். இதை புரிந்து கொள்ள முடியாதவர்கள் நமக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

திருமாவளவன் வெளியிட்ட பதிவு:

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிற கட்சிகளை போல் அல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக்கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் காட்டி கொண்டு இருக்கிறது. இதனையே தொடர்ந்து விசிக உறுதிபடுத்தும். திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் இருக்கும் ஒரே திருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். திமுக கூட்டணி கட்சி பாதுகாப்பாக இருக்க, நாம் எடுத்து சொல்லும் கருத்துகளை நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். ஆளும் கட்சியுடன் இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் செயல்படுத்தும் உத்தி என்பது வேறு. அதேநேரத்தில், ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை என்பது வேறு. திமுகவுடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்துகொண்டு கவனமாக இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவு மற்றும் கருத்துகளை அறிந்து கருத்துகளை வெளிபடுத்தலாம் அல்லது வெளிப்படுத்தாமல் தவிர்க்கலாம்” என்று தெரிவித்தார்.