Thirumavalavan: எடப்பாடி பழனிசாமிக்கு சுதந்திரம் இல்லையா..? அதிமுக – பாஜக கூட்டணி குறித்து திருமாவளவன் பேச்சு!
AIADMK-BJP Alliance: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளைத் திறந்து வைத்தார். பாஜக-அதிமுக கூட்டணியை கடுமையாகக் கண்டித்த அவர், இக்கூட்டணி அம்பேத்கர் மற்றும் பெரியார் அரசியலை ஒழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுத்தபோதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அறிவித்தார். அமித் ஷா கூட்டணியை அறிவித்த முறை அதிமுகவின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
கும்பகோணம், ஏப்ரல் 13: 2025 ஏப்ரல் 14ம் தேதியான நாளை உலகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் (Bhimrao Ramji Ambedkar Birthday) கொண்டாடப்பட இருக்கிறது. இந்தநிலையில், 2025 ஏப்ரல் 13ம் தேதியான இன்று கும்பகோணத்தில் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை திறந்து வைத்து விசிக தலைவர் திருமாவளவன் (VCK Leader Thol Thirumavalavan) அதிமுக – பாஜக் கூட்டணி குறித்து பேசினார். அப்போது அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஒரு சிலர் அதிக தொகுதிகளை தர முடியும், ஆட்சியில் பங்கு தர முடியும், அதற்கு நீங்கள் திமுகவின் கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள் என்று சொல்கிறார்கள். சராசரியான இந்த அரசியலில் இதுமாதியான விஷயங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் கொடுத்தது இல்லை. அப்படிப்பட்ட ஊசலான இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை. முதலில் அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை.
ஒரு சில நேரத்தில் வளைந்து கொடுப்பதினால் பலவீனம் என்று அர்த்தம் இல்லை. திருமாவளவன் நன்றாக வளைந்து கொடுப்பவன். அதிகம் பலம் கொண்டவன். இது பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. நான் மிகவும் வளைந்து கொடுப்பதன்தான், ஆனால் என்னை எளிதாக முறித்துவிட முடியாது, உடைத்து விட முடியாது என்பதை காலம் அவ்வபோது அவர்களுக்கு நிரூபித்து கொண்டிருக்கிறது. என்னை காயாக வைத்து, திமுக தலைமையிலான கூட்டணியை முறித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். இன்று பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைகிறது என்றால் நிலைமையை தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணியை அறிவிக்கிறார். கூட்டணி ஆட்சி என்று அவரே அறிவிக்கிறார். அதிமுகதான் தலைமை தாங்குகிறார் என்றால், எடப்பாடி பழனிசாமிதானே கூட்டணியை அறிவித்திருக்க வேண்டும். நாங்களும் பாஜகவும் கூட்டணி வைக்கிறோம், அதிமுகவில் பாஜக கூட்டணி இணைந்திருக்கிறது. இந்த காரணத்திற்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க உடன்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தால், அவரே சுதந்திரமாக இந்த முடிவை அறிவித்தார் என்று நினைத்திருக்கலாம். ஆனால், அவரை பக்கத்தில் உட்கார வைத்து அமித் ஷாதான் பேசுகிறார், திமுகவை அகற்றுவோம் என்கிறார்.
இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தால் சரி, ஆனால் அமித் ஷா பேசுகிறார். இவர்களின் திட்டம் அம்பேத்கரின் அரசியலையும், பெரியார் அரசியலையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான். விடுதலை சிறுத்தைகள் கட்சி வலுபெறுகிறது என்றால், அம்பேத்கர், பெரியார் அரசியல் வலுபெறுகிறது என்று அர்த்தம். அதேபோல், திமுக வலுவோடு இருக்கிறது என்றால், அம்பேத்கர், பெரியார் அரசியல் வலுபடுகிறது என்று பொருள். அம்பேதகர் பெயரை உச்சரிக்க முடியாமல் இங்கு அரசியல் செய்ய முடியாது, அந்த அளவிற்கு அம்பேத்கர் சர்வதேச அளவிலான தலைவர். அந்த தலைவரை இன்று சாதிய வட்டத்திற்குள் கொண்டு வர பார்க்கிற பிற்போக்கு கும்பல், தந்தை பெரியாரையும் ஒரே நேரத்தில் வீழ்த்துவிட துடிக்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்க கூடாது” என்று பேசினார்.