யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம்.. நான் முதல்வன் திட்ட மாணவர்.. யார் இந்த சிவச்சந்திரன்?
Tamil Nadu UPSC Topper Sivachandran : யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடத்தை பிடித்துள்ளார். அகில இந்திய அளிவல் 23வது இடத்தை பிடித்துள்ளார். இவர் நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சி மையத்தில் தேர்வுக்கு தயாரானது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, ஏப்ரல் 23: இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் (UPSC Exam Result) 2025 ஏப்ரல் 22ஆம் தேதியான நேற்று வெளியாகியது. இதில், தமிழகத்தில் சிவசந்திரன் (Tamil Nadu UPSC Topper Sivachandran) என்ற மாணவர்கள் முதலிடத்தை பிடித்த நிலையில், அகில இந்திய அளவில் 23வது இடத்தை பெற்றுள்ளார். குறிப்பாக, நான் முதல்வன் திட்டம் மூலம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூன்று நிலைகளை கொண்டுள்ளது.
தமிழகத்தில் முதலிடம்
முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல்நிலை தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வும் நடைபெற்றது.
இந்த தநிலையில், இந்த தேர்வின் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 1009 பேர் தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில், அகில இந்திய அளவில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சக்தி துபே முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதைத் தொர்ந்து, இரண்டாவது இடத்தை ஹர்ஷிதா கோயல், மூன்றாவது இடத்தை அர்ச்சித் பராக் பெற்றுள்ளனர். குறிப்பாக, 2024ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாநில அளிவில் சிவச்சந்திரன் என்பவர் முதலிடத்தை ப்றறுள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர் சாதனை
தேர்ச்சி பெற்ற 57 பேரில், 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்ற பயனாளிகள் ஆவார். இதில் முதலிடம் பெற்ற மாணவர் சிவச்சந்திரன் உள்பட 18 பேர் நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சி மையத்தில் தேர்வுக்கு தயாரானவர்கள். தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 23வது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சிக்கு மாணவர் சிவச்சந்திரன் அளித்த பேட்டியில், “யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது. நாளொன்றுக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை யுபிஎஸ்சி தேர்வுக்கு பயற்சி எடுத்து வந்தேன்” என்று கூறினார். இவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மாணவர் சிவச்சந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டு தமிழகத்தில் 45 மாணவர்கள் மட்டுமே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், 2024ஆம் ஆண்டில் 57 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 2023ஆம் ஆண்டு தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர், அகில இந்திய அளவில் 41வது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.