“நீட் தேர்வு அரசியல் மோசடி…” – தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்!

Vijay Blames DMK on NEET : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப் பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல்.

நீட் தேர்வு அரசியல் மோசடி... - தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்!

விஜய்

Updated On: 

09 Apr 2025 20:03 PM

கடந்த மார்ச் 29, 2025 அன்று சென்னை (Chennai) கிளாம்பாக்கத்தை சேர்ந்த மாணவி நீட் (NEET) தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்தை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து நீட் விவகாரம் மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது. இந்த நிலையில் நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தலைமையில் ஏப்ரல் 9, 2025 அன்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின், ”நீட் தேர்வை திமுக ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. நீட் மசோதா தொடர்பாக பிரதமர், ஆளுநர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். மத்திய அரசு கேட்ட விளக்கங்களை தமிழக அரசு உடனுக்குடன் அளித்தது. ஆனால் நீட் தேர்வுக்கு ஒப்புதல் தர மத்திய அரசு மறுத்து விட்டது. நீட் தேர்வை அகற்றுவதற்கான நமது போராட்டம் முடிந்துவிடவில்லை” என்றார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப் பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல். ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை; அது ஒன்றிய அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ளது என்று சொல்லித் தப்பித்தனர்.

தவெக தலைவர் விஜய் கண்டனம்

 

பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள். இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால். மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர் வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசோ, மக்களை ஏமாற்றும் கபட நாடகக் கச்சேரிகளை மட்டுமே நிகழ்த்துகிறது. மக்கள் விழித்துக்கொண்டனர். இனி அவர்களை வஞ்சித்து ஏமாற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் மாணவர்களின் தற்கொலை

நீட் தேர்வினால் கடந்த மார்ச் 29, 2025 அன்று சென்னை கிளாம்பாக்கத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதற்கடுத்த சில நாட்களில் கடந்த 31 ஆம் தேதி சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த சத்யா என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்ற அச்சத்தில் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவரை மீட்ட பெற்றோர் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த ஏப்ரல் 4, 2025 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்து நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.