” மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்” – குமரி ஆனந்தன் மறைவிற்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்..
Kumari Ananthan Demise: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஏப்ரல் 09, 2025 அதிகாலை வயது மூப்பு மற்றும் உடநலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குமரி ஆனந்தன் மறைவிற்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
சென்னை, ஏப்ரல் 09: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஏப்ரல் 09 ஆம் தேதி அதிகாலை காலமானார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருப்பினும் இன்று அதிகாலை (ஏப்ரல் 09, 2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், மகளுமான தமிழிசை சௌந்தராஜன் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
குமரி ஆனந்தன் உடலுக்கு அரசு மரியாதை:
1933 ஆம் ஆண்டு பிறந்த குமரி ஆனந்தன் தமிழ் மீது தீரா பற்று கொண்டவர். மது ஒழிப்பிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழுக்காக அயராது உழைத்தவர். அவரது மறைவு அரசியல் களத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது மகள் தமிழிசை சௌந்தராஜன் வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல்:
ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்;
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக…— TVK Vijay (@TVKVijayHQ) April 9, 2025
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்; தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர்.
எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.