புகார் கொடுக்க வந்த பெண்.. காட்டமாக பேசிய எஸ்.எஸ்.ஐ.. டோஸ் விட்ட டிஐஜி!
அரியலூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அவமரியாதையாக பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி என்பவர் டிஐஜி வருண் குமாரால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ பதிவு வைரலாகியுள்ளது.

வருண் குமார் ஐபிஎஸ்
அரியலூர், ஏப்ரல் 10: அரியலூரில் (Ariyalur) புகார் கொடுக்க நினைத்த பெண்ணை ஆபாசமாக பேசியதாக பெண் எஸ்.எஸ்.ஐ அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி சரக டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ் (Varun Kumar IPS) காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழ்நாடு காவல்துறை (Tamilnadu Police) அதிகாரிகள் ஒரு சிலர் செய்யும் தவறான, கண்டிப்பான அணுகுமுறைகளால் போலீசார் என்றாலே இப்படித்தான் என பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி காவல்துறை உங்கள் நண்பன் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருதரப்புக்கும் இடையே சுமூகமான உறவானது பேணப்பட்டு வருகிறது. ஆனால் அரியலூரில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த காவல் வட்டாரத்தையே அதிர வைத்திருக்கிறது. அந்த சம்பவம் பற்றிக் காணலாம்.
அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். தான் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக வந்த பெண்ணிடம் புகாரை பெற்றுக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி என்பவர் அது குறித்து விசாரணை நடத்தாமல் நாளை வருமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில் புகார் அளித்த பெண்ணால் மறுநாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காவல் நிலையத்திற்கு வர இயலவில்லை.
அவமரியாதையாக பேசிய உதவி ஆய்வாளர்
இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி செல்போனில் தொடர்பு கொண்ட அந்தப் பெண் தன்னால் நீங்கள் சொன்ன நாளில் காவல் நிலையத்திற்கு வர முடியவில்லை. அதனால் இன்று வரலாமா? என்று கேட்டுள்ளார். அதனை கொஞ்சம் கூட மதிக்காத சுமதி பாதிக்கப்பட்ட பெண்ணை சரமாரியாக திட்டிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஆடியோ ஆதாரம் உடன் திருச்சி சரக டிஐஜியான வருண் குமாரிடம் புகாரளித்தார். இதனையடுத்து ஓபன் மைக்கில் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை டிஐஜி வருண்குமார் அழைத்து பேசினார். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுமதியின் நடவடிக்கையை சரமாரியாக கண்டித்தார். அவரெல்லாம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினால் தான் சரிப்பட்டு வரும்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மகளிர் காவல் நிலையம் எதற்காக வைக்கப்பட்டுள்ளது என கேள்வியெழுப்பிய வருண் குமார், புகார் அளிக்க வரும் பாதிக்கப்பட்டவர்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா என கோபமாக கேள்வி எழுப்பினார். மேலும் நான் நேரடியாக ஆய்வு வரும் போது இதனை பார்த்துக் கொள்கிறேன் எனவும் டிஐஜி வருண் குமார் தெரிவித்தார். புகார் அளிக்க வந்த பெண்ணிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறி சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதியை வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஓபன் மைக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு டிஐஜி வருண் குமார் டோஸ் விட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது இப்படி நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கும் காவல்துறையினர் மீது மிகுந்த நம்பிக்கை வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.