மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற பெண்.. காப்பாற்றிய டிராஃபிக் போலீசார்!
சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், ஆழ்வார்பேட்டை போக்குவரத்து காவலர்கள் தேவராஜ் மற்றும் பிரேம்நாத் ஆகியோர் விரைந்து சென்று அவரை மீட்டனர். 20 நிமிட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெண் தனது முயற்சியை கைவிட்டார்.

பெண் தற்கொலை முயற்சி - தடுத்த போலீசார்
சென்னை, ஏப்ரல் 20: சென்னையில் (Chennai) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு (Suicide Attempt) முயன்ற சம்பவத்தில் இரண்டு போக்குவரத்து காவலர்கள் (Traffic Cop’s) முயற்சியால் அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்ட சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. சமூகத்தில் சமீப காலமாக நிலவும் பல்வேறு சூழல் காரணமாக இளம் வயதினர் தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவை அதிகளவில் எடுத்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதனைத் தடுக்க பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனால் தற்கொலை எண்ணத்தில் ஒருவர் இருக்கிறார் என தெரிந்தால் சம்பந்தப்பட்டவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அதில் இருந்து அவரை மீட்டெடுக்க உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் 47 வயது பெண் ஒருவர் மனநல பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
பால்கனியில் நின்று தற்கொலை முயற்சி
இவர் நேற்று (ஏப்ரல் 19, 2025) திடீரென தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையின் ஐந்தாவது தளத்தில் உள்ள அறையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் அறைக்கு முன்பு இருந்த பால்கனியில் நின்று கொண்டு கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார். இதனால் மருத்துவமனை வளாகம் பெரும் பரபரப்பானது.
உடனடியாக ஆழ்வார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை அருகே உள்ள எல்டாம்ஸ் சாலை டிடிகே சந்திப்பு பகுதியில் இரண்டு போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தனர். காவல்துறையினர் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்த நிலையில் அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றது குறித்த செய்தி இந்த போக்குவரத்து போலீசாருக்கும் கிடைத்தது.
விரைந்து சென்ற போக்குவரத்து காவலர்கள்
இதனை தொடர்ந்து பணியில் இருந்த தலைமை காவலர் தேவராஜ் மற்றும் மற்றொரு காவலர் பிரேம்நாத் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்றனர். பிரேம்நாத் அப்பகுதியில் நிலவிய பதட்டத்தை குறைக்கும் வகையில் அங்கு கூடியிருந்த மக்களை கலைந்து போக சொன்ன நிலையில் தலைமை காவலரான தேவராஜ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார்.
தற்கொலைக்கு முயன்றவரிடம் நான் உன்னுடைய சகோதரன் மாதிரி என பேசி அந்தப் பெண்ணிடம் என்ன பிரச்சனை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் நிலைமையை சரி செய்து தருவதாகவும் சொன்னார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்த பெண் தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே வந்தார்.
பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் அந்த பெண்ணை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண் திருவொற்றியூரில் வசிக்கும் மாலதி என தெரியவந்தது. சரியான நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை பாதுகாத்து நிலைமையை சரி செய்த போக்குவரத்து காவலர்களை மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும், காவல்துறையினரும் பாராட்டினர்.