பல ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்: பயணிகள் கவனத்திற்கு ரயில்வே-வின் முக்கிய அறிவிப்பு!

Southern Railway: சேலம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால், திருச்சி கோட்டம் பல ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி, தெற்கு ரயில்வே திருச்சி – தாம்பரம் இடையே இரு சிறப்பு ரயில்களை இயக்குகிறது. பயணிகள் மாற்றப்பட்ட நேரத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது;

பல ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்: பயணிகள் கவனத்திற்கு ரயில்வே-வின் முக்கிய அறிவிப்பு!

பல ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

Published: 

23 Apr 2025 19:17 PM

தமிழ்நாடு ஏப்ரல் 23: சேலம் ரயில்வே (Salem Railway) கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு, திருச்சி ரயில்வே (Trichy Railway) கோட்டம் பல்வேறு ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது. ரயில்வே சேவை, இந்தியாவின் முக்கியமான பொது போக்குவரத்து முறையாகும். தினமும் இலட்சக்கணக்கான மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இந்த பணிகள் காரணமாக சில ரயில்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ ரத்து செய்யப்படுகின்றன.

ரயில் சேவையில் மாற்றம்

இதன் அடிப்படையில், பாலக்காடு டவுன் – திருச்சி எக்ஸ்பிரஸ் (16844) 2025 ஏப்ரல் 24, 26 மற்றும் 29 தேதிகளில் காலை 6.30 மணிக்கு பாலக்காடு டவுனில் இருந்து புறப்பட்டு, கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மயிலாடுதுறை – சேலம் மெமு எக்ஸ்பிரஸ் (16811) ரயிலும், ஏப்ரல் 2025 24, 26 மற்றும் 29 தேதிகளில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, மாயனூர் வரை மட்டுமே செல்லும்.

அதேபோல், திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843) 2025 ஏப்ரல் 25ஆம் தேதி பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, திருப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், சேலம் – மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (16812) 2025 ஏப்ரல் 24, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சேலம் – கரூர் இடையே இயக்கம் ரத்து செய்யப்படுவதால், அதன் பதிலாக கரூரில் இருந்து பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறையை நோக்கி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்திற்குத் திட்டமிடும் பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு, முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோடை விடுமுறையையொட்டி பயணிகளுக்காக இரு சிறப்பு ரயில்கள்

வழக்கமாக கோடை விடுமுறைக் காலங்களில் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செல்ல திட்டமிடுகிறார்கள். இதனால் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலைமையை சமாளிக்க, தெற்கு ரயில்வே இரு சிறப்பு விரைவு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, ரயில் எண் 06190 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் விரைவு சிறப்பு ரயில், 2025 ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 வரை வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.35 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

இதற்கமைவாக, ரயில் எண் 06191 தாம்பரம் – திருச்சிராப்பள்ளி விரைவு சிறப்பு ரயிலும், அதே தேதியில் இருந்து அதே வார நாட்களில் இயக்கம் பெறுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும்.

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ஏற்பாடு

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு, இந்த ரயில்களில் 2 ஏசி சிட்டிங் பெட்டிகள், 10 ஸ்லீப்பர் வகுப்பு இருக்கை பெட்டிகள், 6 பொதுமக்கள் பயணிக்கக்கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மெச்சான்கள் என்பன இடம் பெற்றுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 22 அன்று பிற்பகல் 2.15 மணிக்குத் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு செல்லும் ரயில்கள் தொடர்பாகவும் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.